முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் எம்.டி.வாசுதேவன் நாயர் ஒரு மாஸ்டர்? | இறுதி யாத்திரை நாவல் வாசிப்பு அனுபவம்! (சுருக்கமாக)

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவலை கோவையிலிருந்து திரும்பி கொண்டிருந்த பயணத்தின் போது வாசித்தேன். பாதி நாவல் மட்டுமே வாசிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள் காலையில் அதனை முடித்து விட்டு அடுத்து வாசிப்போம் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கினேன். சற்று முன் தான் வாசித்து முடித்தேன். ஆனால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. எப்போதுமே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஏனென்றே தெரியாத ஒரு அமைதி வந்து மனதில் அமர்ந்து கொள்ளும். அது நீடிக்கும் நேரம் அந்த புத்தகத்தின் செறிவைப் பொருத்தது.

எம்.டி.வி ஏன் ஒரு மாஸ்டர் என்பதை இந்த நாவலின் வழியாக உணர முடிந்தது. ஆரம்ப அத்தியாயங்களில் யார் எதை சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகித்து கொள்ள சிறிது நேரம் எடுக்கிறது. ஒன்றிரண்டு முறை பின்னால் சென்று வாசிக்க நேரிடும். ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு தான். நாவலின் பேட்டர்ன் பிடிபட்டவுடன் இலகுவான வாசிப்புக்கு நாம் நகரத் தொடங்கிவிடுவோம்.
வரிகளுக்கிடையேயான சொல்லப்படாத அர்த்தங்கள் தான் நாவலின் எடையைத் தீர்மானிக்கிறது. அத்தனை ஆழமாக அதுவும் வெளிப்படையாக சொல்லாமலே வாசகருக்கு ஒன்றை புரிய வைக்க முடியும் என்பதெல்லாம் மாஸ்டர்களினால் மட்டுமே சாத்தியம்.
அப்பாவின் மரணத்திற்கு நாட்டின் வெவ்வேறு திசையில் இருந்து வந்து சேரும் சகோதரர்கள். அவர்களுக்கிடையேயான உறவு. அப்பாவிற்கும் அவர்களுக்குமான தருணங்கள். அப்பா சுயபோகங்களை விரும்பக்கூடியவர். மகன்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்வி வரும் போது வெறுமையே எஞ்சுகிறது. ஆனால் மகன்கள் அவரை பார்த்து கொள்கிறார்கள். அவருக்கு வருவாய் ஈட்ட போன இடத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது. கணக்கில்லாத அளவில் உறவுகள் இருக்கின்றன. அப்பாவோடு உணர்வு ரீதியா துண்டாக இருப்பவர்கள் ஊர்ப்பேச்சுக்காக ஒன்று சேர்க்கிறார்கள்.
இதே நேரத்தில் வாசித்த யாவரும் இணைய இதழில் வெளிவந்த வைரவன் அண்ணாவின் 'சுருள்' கதையும் நினைவுக்கு வருகிறது. கோடி அப்பாக்கள் இருப்பார்களெனில் கோடி கதைகளும் இருக்கத் தானே செய்யும்.
சிற்றலைகள் ஒன்றாக உருவாக்கி ஒரு நேரத்தில் ஒன்றோன்று சேர்ந்து கரையில் சில்லு சில்லாக உடைவது போல தான் இந்த நாவலும்.
தனிப்பட்ட முறையில் என்னோடு தொடர்பு படுத்தி பார்க்கக் கூடிய சில தருணங்கள் இதில் உண்டு. எம்.டி.வி.யின் நாவல்களை எல்லாம் இனி வாசிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...