முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன். 

புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம்.

ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் 
எழுத்தாளர்: வா.மு.கோமு 
உயிர்மை வெளியீடு
முதற்பதிப்பு: டிசம்பர் 2022

பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெருக்கமாக இருப்பதால் அதன் அசல்தன்மை என்னவாகும்?

இப்படியான பல கேள்விகள் இந்தக் குறிப்பை எழுதுவதற்கு முன்பு எனக்குத் தோன்றியது. எது இலக்கியம் என்கிற கேள்விக்கான பதில் மிக விரிவானது. எது இலக்கியம் எனத் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் அதே நேரத்தில் எவை எல்லாம் இலக்கியமல்ல என்கிற விவாதமும் பரவலாக நடைபெற்று வருகின்றன. 

சமீபத்தில் தமிழினியில் வெளிவந்த இராஜேந்திர சோழனின் கதை பெரும் சலசலப்பை இலக்கிய வட்டாரத்தில் உருவாக்கியது. மாமியாருக்கும் மணமகனுக்குமான பிறழ் உறவை பேசிய வகையில் அந்தக் கதையை விமர்சித்தவர்கள் அதனை மஞ்சள் பேப்பர் கதை என வர்ணித்தனர். அதற்கொரு மறுப்பாக இல்லை அதுவும் ஒருவகையில் கதை தான். அதிலுள்ள அழகியல் சார்ந்த விஷயங்களைப் பாருங்க என மற்றொரு புறம் ஆதரவு குரல்களும் எழுந்தன. அதை போலவே ஒரு பிறழ்உறவை இந்தப் புதினமும் பேசுகிறது. 

என்னுடைய வாசிப்பில் இதனை ஒரு முழுமையற்ற அல்லது அப்படியாக அமைய விரும்பிய புத்தகமாகப் பார்க்கிறேன். இன்னும் இதனை விரிவாக்க ஏராளமான கூறுகள் இருந்தாலும் திடீரென மழைக்காக நிறுத்தி வைக்கப்படும் விளையாட்டு போட்டி போல இந்த நாவலும் நிறைவு பெறுகிறது. 

எதார்த்த கிராமிய பாலியல் சார்ந்த கதைகளுக்காகப் பெரிதும் அறியப்படுபவர் வா.மு.கோமு. இதிலிருக்கும் கிளர்ச்சி சார்ந்த விஷயம் எந்தளவிலும் ஈர்க்கவில்லை எனினும் இந்நாவல் நடக்கிற 90-களின் கிராமத்து சூழலும் விசேஷமான சில சாங்கியங்களும் (தலையில் தேங்காய் விழுந்ததால் எழவு போலவே கருதி இறுதி சடங்கை நடத்துவது) அதை சார்ந்த ஆவணப்படுத்தல் தன்மையும் பகடி நிறைந்த உரையாடல்களும் முக்கியமாகப்படுகிறது. 

இந்நூலில் எடுத்துக்கொள்ள எதுவுமில்லை என முற்றிலும் புறந்தள்ளவோ படிக்கச் சுவாரசியமாக இருக்கிறது என்பதாலேயே மட்டும் ஏற்றுக் கொள்ளவோ முடியாத சூழலில் ஒரு வகையான வாசிப்பு என்றே சமாதானம் சொல்லிக் கொள்ள முடிகிறது.

தவளைகள் குதிக்கும் வயிறு, மரப்பல்லி, பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் என ஏற்கனவே வா.மு.கோமுவின் எழுத்துக்களை வாசித்திருந்தாலும் எனக்கு இந்தப் புத்தகம் ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது. 

இரண்டு விதமான கதை லேயர்கள் லீனியராக பயணிக்கின்றன. இரண்டும் சந்திப்பதோ ஒன்றில் ஒன்று பாதிப்பதோ எதுவுமே நிகழவில்லை. இரண்டும் ஒரே தன்மையானவையா என்றால் அதுவும் இல்லை. ஒரு கதை போக்கில் அடங்காத பசங்க- அவர்கள் அப்பாக்கள்- ஆசிரியர்கள் இடையேயான பால்யம் சார்ந்த கதை. இன்னொரு பக்கம் சாராயம் காய்ச்சும் மாரிமுத்து-அவன் காதலிக்கும் மாமன் பெண்- தன் ஆசைக்காக அவனை விரும்பும் அத்தை முறையில் ஒருத்தி இவர்களுக்கு இடையேயான கதை.

ஆரம்பத்தில் வரும் சிறுவர்கள்- அப்பாக்கள்- ஆசிரியர்கள் இடையேயான உரையாடல்கள் வெறும் கொச்சையான வார்த்தைகளைப் புழங்க விடுவதற்காகவே அமைக்கப்பட்டது போல பேண்டஸி தன்மையோடே படுகிறது. அல்லது அந்தக் காலத்தில் அப்படி தான் இருந்தார்களா.

இத்தனைக்கும் 5 வகுப்பு மாணவர்களாக காட்டப்படுபவர்கள் பேசத் தொடங்கினாலே சாதாரணமாக நான்கு கெட்ட வார்த்தைகள் வருகின்றன. சாதிய ஏளனம் வேறு. அந்தச் சூழலை அப்படியான காலக்கட்டத்தை அறியாதவர்களாக இருப்பினும் அந்தப் பசங்களின் அப்பாக்கள் ஆசிரியர்கள் என்பதும் அவர்களின் உரையாடல்கள் கூட நம்பும்படி இல்லை. சுவையான கற்பனை என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 

18+ நாவல். கொச்சையான வசைகளும் பாலியல் சார்ந்தும் படிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது இல்லை.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து