முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கடிதம்


அன்பின் பிரபாவுக்கு,

     நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன். 

     உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.

     உன்னோடு அலையில் பேசலாம் என்றே அலைபேசியை எடுத்தேன். நடுங்குகிற என்னுடைய குரல் உன்னை நிலை குலைய செய்யலாம் என்பதற்காக அதனை தவிர்கிறேன். வார்த்தைகளைத் தேடி பயத்தைக் கொட்டி விடுவது ஆறுதலாக இருக்கிறது.

     உன் கவிதையின் ஒரு வரி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. ‘நேற்றைக்கு அணிந்திருந்த முகமூடியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’ அது எதைப் பற்றிய கவிதை என்பது கூட நினைவில் இல்லை. நீ எனக்கு அனுப்பி இருக்கிற பிரதியில் தேடலாம் தான். ஆனால் முழு கவிதையைப் படித்தால் இந்த உணர்வு இருக்குமா என தெரியவில்லை. இந்த ஒரு வரி போதுமானது. அந்த முகமூடியை எல்லோரையும் போலவே நானும் தவற விடுகிறேன்.

     இந்த கடிதம் எவ்வளவு தூரம் நீள இருக்கிறது என தெரியவில்லை. பாதியில் நிறுத்துவதற்கு முழுதுமாக எழுதி இதிலிருந்து கடந்துவிடவே விரும்புகிறேன். இந்த சூழலில் இருந்து விடுபடும் விருப்பத்தைப் போலவே.

     உன்னுடைய நிலைத் தகவல்களைப் பார்த்தேன். கதைகள் எழுத முயற்சி செய்கிறாய் போல. ‘ஒளிந்திருக்கும் வானம் படித்தேன். என்னை பிரதி செய்வதைக் காண்கிறேன். படைப்பாளனுக்கு வாக்கப்பட்டால் எழுத்துகளில் தான் வாழ்க்கை போல. ரொம்ப ரசிச்சேன் டா. இன்னும் நீ நிறைய எழுதணும். இப்போதைக்கு அது மட்டும் தான் என்னால் சொல்ல முடிகிறது.

     கனவுகளில் வருவதை சொன்னால் அதனை நீ ஒரு கதையாக எழுதிவிடுவாய். மஞ்சள் கொன்றை மரம் நினைவில் இருக்கிறதா. பெரும்பான்மையான நமது சந்திப்புகளின் சாட்சி. அது எழுந்து நடந்து வருகிறது. நீண்ட வேர்களில் இருந்து உதிரும் செம்மண் கல்லூரி சாலைகளில் பெய்கிறது. நீ இன்னும் வரவில்லை. உன் சோம்பேறித்தனத்தை நினைத்து சலிப்பு அடைந்து அமர்ந்திருக்கிறேன் கூடைப்பந்து கம்பத்தின் கீழ் திண்டில். முக கவசத்தைக் கேட்டவாறே வாகை மரத்துக்கு அருகே அமர்கிறது கொன்றை மரம். கொஞ்ச நேரத்தில் வாகை மரமும் எழுந்துவிடுமோ என நான் அஞ்சும் போது அந்த சாலையில் நீ வருகிறாய். தானோஸ் கையைச் சொடுக்கிய போது உதிர்ந்து விழுவது போல மரங்கள், நீ, சாலை எல்லாமும் காணாமல் போகும் போது நான் அறையில் இருக்கிறேன். எழுந்து அமர்கிறேன். அம்மா தண்ணீர் எடுத்து தருகிறாள். தண்ணீரும் அவளும் உதிர்கிறார்கள். மெத்தையில் இருந்து கீழே விழுகிறேன் கனவிலேயே. நான் கனவில் இருந்து விழித்து விட்டேன்.

     விரைவில் எல்லாமும் சரியாக வேண்டும். திருப்பாவை வாசிக்கிறேன். என்னால் ஒருபோதும் பாட முடியாது. இருந்தும் சத்தம் எழுப்பி வாசிப்பது அம்மாவே கூட இருப்பது போல இருக்கிறது. வழக்கமான நாட்கள் தொடங்கியதும் நீண்ட தொலைக்கு உன்னோடு நடந்து சென்று பாய் கடையில் உரப்பு தாங்காமல் உதட்டில் எரிச்சலோடு ஆட்டுக்கால் சூப் குடிக்க வேண்டும். அப்படியே அங்கிருந்து நடந்து இரண்டு ஐஸ்கிரீம். இருட்ட போகுது. வீட்டுக்கு போ என நீ துரத்தும் வரை பூங்காவில் உன் மடியில் தூங்கி எழ வேண்டும். காத்திருக்கிறேன்.

     அம்மாவைக் கேட்டதாக சொல்லு. தங்கச்சி எப்படி இருக்கா. என்ன செய்யுறா. எல்லாம் சரியானதும் என்னை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதா சொல்லு. நீ தான் அவர்கள் எல்லோருக்கும் நம்பிக்கை. எனக்கும் தான்.

நீ எழுதுவதை எதிர்நோக்கி,
ஆதிரா









    


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...