முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்


செவப்பு கல் அருகே
இன்னுமொரு
செவப்பு கல்
மற்றுமொரு
செவப்பு கல்
இன்னும் ஒன்று
அடுத்து ஒன்று
அடுக்கி கொண்டே
நகர்கிறார்
ஒவ்வொன்றுக்கும்
இடையே
ஒரே மாதிரியான
இடைவெளியை
அனுமதித்த படி

மண்ணும் சிமண்டும்
கலந்த குவியலை
அகண்ட தட்டில்
கொஞ்சம்
அள்ளிக் கொண்டு
தனது
கூம்பு கரண்டியை
வலக்கையில்
தாங்கியவாறு
செவப்பு கற்களுக்கிடையே
அரக்கை நிரப்பியும்
பூசியும் தடவியும்
நகர்கிறார்
மேல் வரிசை
அடுக்க

வெட்டப்பட்ட நூலொன்று
சரியாய் கட்டப்பட்டிருக்கிறது
சீராய் கட்டடம்
எழுப்ப

அடிக்கொருதரம் டேப்பை
நீட்டி அளக்கிறார்
இடுப்பளவு
வரை எழுந்து நிற்கும்
குட்டிச்சுவர்
சிரித்துக் கொண்டே
மேல்நோக்குகிறது

பொழியும் வெய்யில்
வியர்வையை வழியச்
செய்கிறது
கண்டுகொள்ளாம
தனது வேலையை
செய்பவரின்
கிழிந்த பனியனில்
படிந்திருக்கிறது
வியர்வை காய்ந்த பின்
தேங்கும் உப்பு

சூரியன் மேற்கே
திசை மாற
அவர் நிழல்
கிழக்கே சாய்கிறது

சூடான தேநீரால்
நிரம்பிய வயிறு
மீண்டும் ஏறச் சொல்கிறது
சுவர்களுக்கிடையே
இன்னிக்கான வேலை நேரம்
முடியப் போவதற்கான
அறிகுறியுடன்
முடிக்க வேண்டிய
வேலைகளின் நினைவுடன்

வானத்தை நோக்குகிறார்
கலைந்த மேகங்களில்
ஊடுருவும் செங்கதிர்கள்
அடுக்கியிருந்த செங்கற்களின்
கீழ் சிதறியிருந்த
நிறத்தை
ஒத்திருக்கிறதோ

சீரான வீடு கட்ட
சிந்தும் வியர்வை
அவ்வீட்டிற்கானது
மட்டுமல்ல
சிதிலமடைந்த தன்
வீட்டின் தேவை
நிரப்பவும் தான்

நீரில் முகம் கழுவி
சிமிண்ட் படிந்த
லுங்கியை
இறக்கிவிட்டு
சோறு கொண்டுவந்த
கூடையை
பற்றிக்கொண்டு
கிளம்புகிறார்
திரும்பி பார்க்காமல்

எழுந்த கட்டிடம்
நோக்கி கொண்டேயிருக்கிறது
அவர் திசை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து