முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் காலத்தின் தூதுவர்கள்

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.ஷைலஜா)
பகிர்வு:

 "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
- பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார்.

தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க வைக்கிறது.
மனிதர்களை மிகக் குறிப்பாக பெண்களை கடக்கிற அனுபவங்கள் நேர்மையோடு கடத்தப்படுகின்றன. பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு தனியார் பள்ளிக்கு மாறுகிறவர் அவமானங்களை பரிகாசங்களை எதிர் கொள்ளும் போது ஆதரவாக வகுப்பின் உள்ளிருந்து சிரிக்கும் சாரதாவின் நேர்மறை அலை, படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி சாஹினாவிடமிருந்து பெற்ற முத்தம் பின்னாளில் அவளின் தீக்காய முகத்தில் எதிர்பாராது திருப்பி கொடுத்தது, சபலத்தின் கட்டுகளினால் ஆட்பட்டதற்கு பலியாகிப் போன ஸ்ரீதேவி, ராதிகா, லைலா, பணத்தைக் கொடுக்காமல் இரவு ஏமாற்றப்பட்ட வேசி அன்போடு காலையில் கொடுத்து போன ஐந்து ரூபாய், மார்த்தா, அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகன் என ஒரு மனிதன் கடக்க சாத்தியமான உயர்வு தாழ்வுகளை உணர்ச்சிபூர்வமாக முன்வைப்பதில் எவ்வித சுய பிரகடனமும் தென்படாதது பாலசந்திரனின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது.

சோர்ந்து போய் உலகின் மீதும் நமக்கான விதியின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது உலகம் அதை விடப் பெரிதானது என உணர்த்தும் தருணங்களை அறிமுகப்படுத்துகிறது சிதம்பர நினைவுகள்.

சிற்பங்களும், கல்தூண்களும், உயர்ந்த கோபுரமும் மறைந்து வயதான கிழவர் தான் இருக்கும் வரை கவனித்துக் கொள்ளத் துடிக்கும் மனைவியின் மீது கொண்டிருக்கும் தீராத அன்பின் சாட்சியை சொல்லும் முதல் கட்டுரையில் தொடங்கும் நூல், கமலாதாஸுக்கு ஸ்வீடிஷ் கவிஞர் ஷென் எஸ்ப்மெர்க் வெளிப்படுத்தும் அன்பின் பரிமாறுதல் பேசும் இறுதி கட்டுரையில் முடிவடைகிறது. இடைப்பட்ட 18 கட்டுரைகளிலும் வாழ்வின் பல நிறங்கள்.

ஒரு சுவாரசியமான மனிதனாக நான் பாலசந்திரனைப் பார்க்கிறேன். எல்லா நிலைகளிலும் வாழ்வின் மீதான அவரின் நிலைப்பாடும் எதிர்வினையும் மனிதர்களுக்கான பாடங்கள். தன் கண் முன்னே கடந்து போகும் இறப்புகள், அதன் பாதிப்புகள், நினைவுகள் எவ்வித சலனமுமற்றதாக உலகம் நிச்சயம் இருக்க போவதில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அது மகா நடிகரான சிவாஜியாக இருக்கட்டும், கேரளத்து தெருக்களில் பரதேசியாக அலைந்த பாலசந்திரனாக இருக்கட்டும் நானாகவோ நீங்களாகவோ இருக்கட்டும் காலத்தின் அலைகளில் அடித்துச் செல்லும் கட்டைகளாக தான் இருக்கிறோம். நம் நினைவுகளே நமக்கான காலத்தைக் காட்டுகிறது.

மொழிப்பெயர்ப்பா என ஆச்சரியப்பட வைக்கிறது ஷைலஜா அவர்களின் நடை. சிதம்பர நினைவுகளில் தொலைந்துப் போன என்னை மீட்பதற்கு ஒரு தேநீர் தேவைப்பட்டது. உங்களுக்கு எப்படியோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...