முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்


செவப்பு கல் அருகே
இன்னுமொரு
செவப்பு கல்
மற்றுமொரு
செவப்பு கல்
இன்னும் ஒன்று
அடுத்து ஒன்று
அடுக்கி கொண்டே
நகர்கிறார்
ஒவ்வொன்றுக்கும்
இடையே
ஒரே மாதிரியான
இடைவெளியை
அனுமதித்த படி

மண்ணும் சிமண்டும்
கலந்த குவியலை
அகண்ட தட்டில்
கொஞ்சம்
அள்ளிக் கொண்டு
தனது
கூம்பு கரண்டியை
வலக்கையில்
தாங்கியவாறு
செவப்பு கற்களுக்கிடையே
அரக்கை நிரப்பியும்
பூசியும் தடவியும்
நகர்கிறார்
மேல் வரிசை
அடுக்க

வெட்டப்பட்ட நூலொன்று
சரியாய் கட்டப்பட்டிருக்கிறது
சீராய் கட்டடம்
எழுப்ப

அடிக்கொருதரம் டேப்பை
நீட்டி அளக்கிறார்
இடுப்பளவு
வரை எழுந்து நிற்கும்
குட்டிச்சுவர்
சிரித்துக் கொண்டே
மேல்நோக்குகிறது

பொழியும் வெய்யில்
வியர்வையை வழியச்
செய்கிறது
கண்டுகொள்ளாம
தனது வேலையை
செய்பவரின்
கிழிந்த பனியனில்
படிந்திருக்கிறது
வியர்வை காய்ந்த பின்
தேங்கும் உப்பு

சூரியன் மேற்கே
திசை மாற
அவர் நிழல்
கிழக்கே சாய்கிறது

சூடான தேநீரால்
நிரம்பிய வயிறு
மீண்டும் ஏறச் சொல்கிறது
சுவர்களுக்கிடையே
இன்னிக்கான வேலை நேரம்
முடியப் போவதற்கான
அறிகுறியுடன்
முடிக்க வேண்டிய
வேலைகளின் நினைவுடன்

வானத்தை நோக்குகிறார்
கலைந்த மேகங்களில்
ஊடுருவும் செங்கதிர்கள்
அடுக்கியிருந்த செங்கற்களின்
கீழ் சிதறியிருந்த
நிறத்தை
ஒத்திருக்கிறதோ

சீரான வீடு கட்ட
சிந்தும் வியர்வை
அவ்வீட்டிற்கானது
மட்டுமல்ல
சிதிலமடைந்த தன்
வீட்டின் தேவை
நிரப்பவும் தான்

நீரில் முகம் கழுவி
சிமிண்ட் படிந்த
லுங்கியை
இறக்கிவிட்டு
சோறு கொண்டுவந்த
கூடையை
பற்றிக்கொண்டு
கிளம்புகிறார்
திரும்பி பார்க்காமல்

எழுந்த கட்டிடம்
நோக்கி கொண்டேயிருக்கிறது
அவர் திசை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...