முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது.

Orphan Train By Holly J. Kroening

     உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நான் அப்படி இயக்க விரும்பவில்லை. சரி, இப்படி வைத்துக் கொள்வோமோ. என் இருக்கைக்கு எதிரில் காலியான இருக்கையை நிரப்ப ஒரு குழந்தையும் அவள் தாயும் வருவதாக. இல்லை, வேண்டாம். அம்மாக்கள் எப்போதும் தனியாக பயணம் மேற்கொள்வதில்லை. பின்னாடியே கனமான பைகளைச் சுமந்துக் கொண்டு வரும் அவரது கணவர், என் அருகில் இருக்கும் இடத்தை நிரப்பிக் கொள்வதோடு மட்டுமில்லாமல் எனது கதை எழுதும் மனநிலையையும் சிதைத்துவிடுவார் புடலாங்காய் அரசியல் பேசுவதன் மூலமாக. ஒரு கிழவியும் அவரது பேரனும்- பேரனுக்கு வேடிக்கை அலுத்துவிட்டால் தூக்கம் வந்துவிடும். பாட்டி கால் நீட்டிக்கொள்வாள். பேரன் துயில்கொள்வான். உலர்ந்திருக்கும் அவரது முகம் முடிவற்ற சோகத்தை என்னுள் ஆழ்த்திவிடும். பிறகு நானும் முங்க வேண்டியதுதான் துக்கக் கடலில்.

     கண்ணாடியணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர்- காப்பி வாங்கி குடிப்பார். தந்தியோ ஹிந்துவோ என் முன் விரிக்கப்படும். அல்லது நீண்ட போனில் தேடி தேடி தமிழ் தட்டச்சு மூலம் தனது அலுவலக கட்செவி அஞ்சல் குழுவில் மேனேஜர் பகிர்ந்திருக்கும் அரதபழைய காமெடிக்கு ‘அருமை’ கமெண்ட் இட்டுக் கொண்டிருப்பார். எனக்கு வேற ஒன்னும் தோன்றாது அவரிடம் பேப்பர் கேட்கலாமா வேண்டாமா என்பதைத் தவிர. ஒரு இளைஞன் வருவதாக வைத்துக்கொள்வோமா. வேணாம். அவனது தோழியோடு மட்டும் அளாவல் செய்வான். அல்லது யூடூபில் முகம் புதைத்திருப்பான்.

     ஒரு முடிவுக்கு வந்தால் தான் இந்தக் கதையைத் தொடர முடியும். முதல் நிறுத்தம் வரும் வரை உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நான் உடன்படுகிறேன். ஒரு அழகான யுவதி வருகிறாள். வர்ணனை இல்லாத பெண் அறிமுகம், கார சட்னி இல்லாமல் குழிப் பணியாரம் சாப்பிடுவது போல் ஆகிவிடும். ம்... தொடங்கட்டும். மெல்ல நடை பயிலும் தோரணையில் முன்னங்கால் நகர, பின்னங்காலை உரசாதவாறு வலது கையால் தனது ரோலர் பொருந்திய சூட் கேசையும், இடது தோளில் ஆரம்பித்து வலது இடுப்பில் முடிவுறும் ஸ்லிங் பேக்கையும் தாங்கியவாறு இடது உள்ளங்கையில் பற்றியிருந்த கையடக்க பேசியை நோக்கியவாறு பார்வையால் இருக்கை எண்களை கடந்துக் கொண்டே என் பகுதிக்கு வருகிறாள். எனக்கு எதிரில் உள்ள சாளர இருக்கையின் எண்ணை வாசித்துவிட்டு உறுதிப்படுத்திய அவளது கண்கள் என்னைக் கவனிக்கவில்லை. தன் ரோலரின் கைப்பிடியை உள்ளடங்க செய்து விட்டு அப்பெட்டியை இருக்கைக்கு அடியில் புதைத்துவிட்டாள். அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... நீல நிறத்தில் நீண்டிருந்த டாப்சுக்கு மஞ்சள் குளித்திருந்த லெக்கின்ஸ் பொருத்தமான உடை தானே. அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். ஸ்லிங் பேக் அவளது மடியில் தன் இடத்தை உறுதி செய்துக் கொண்டது. அதிலிந்து வெளியே வந்த இரு தலை நாகத்தின் இரண்டு தலையையும் தனியே பிரித்து காதிற்கு ஒன்றாக பொருத்திக்கொண்டாள். அனிருத்தோ ஜீவியோ ரஹ்மானோ ஏன், ஆதியே கூட காதல் கூவிக் கொண்டிருக்கலாம்.

     இப்படியே நான்கு பக்கத்துக்கு இழுத்திடலாம் தான். ஆனா சுவாரசியம் வேணுமே. இப்ப கொஞ்சம் பின்னாடி போவோம். அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். திடீரென மேல் நோக்கியவள் என்னைப் பார்த்து புரிபடாத சிரிப்பினைச் சிந்திவிட்டு முகத்தைச்  சாளரம் பார்த்து வைத்துக் கொண்டாள். அடுத்து என்ன ட்விஸ்ட் வைக்கலாம்...

     எதாவது ஒன்று பேசணும்னு தோன்றிக் கொண்டே இருந்தது. என்ன பேசுவது எவ்விதமான யோசனையும் வரவில்லை. கூப்பிட்டுவிட்டு உடனே என்ன தோணுதோ அடிச்சுவிடலாமா... ம்கூம். மொபைல் நம்பர் கேட்டு அவ முறைச்சுட்டா, ஊரு போய் சேர்வது வரை இந்தப் பாழாப் போன கம்பிய பார்க்க வேண்டியாகிவிடும். நல்லவேளை. என் முன்னோர்கள் காட்டிய வழி கிடைத்தது. யூ ஆர் கிரேட் காய்ஸ்.

     ‘ஹ்ஹ்ஹலோ...’

எவன்டா அவன் பிரேக் அடிச்சது. வார்த்தை காற்றில் விழுவதற்கு பதிலா வழுக்கி என் வாய்க்குள்ளே மீண்டும் விழுந்துருச்சு. ஓ, அடுத்த ஸ்டேஷன் வந்துடுச்சா... பொதுவா நான் கால நேரமெல்லாம் பார்க்கிறது கிடையாது. ஆனா முத முறையா பார்க்க வேண்டியதாகிடுச்சு. எதனாலயா? அதான் எதிரில் உர்கார்ந்து இருக்கிறதே... வெண்ணிற பைங்கிளி.

     ரயில் மீண்டும் தடதடக்கும் வரை மௌனம். இப்பவாவது சொல்றா... மனம் எழுத்துகளைக் கோர்க்க தொடங்கையில், எங்கிருந்தோ ஒலித்த குரல் என் பெயரை உச்சரிப்பது போல் தோன்றியது. அட... சீ. ஏ, இன்டியூஷன் உன்ன கொல்லப் போறேன்...

     மீண்டும் அதே குரல். தலையைச் சிறிது வலமாகத் திருப்பினேன். பார்த்திபன் அங்கிள் தோளில் ஆபீஸ் பை ஒன்றும், கையில் கட்டப்பை ஒன்றுமாக என்னைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னே என்னை நோக்கி நீண்டிருந்தது அவரது பெருத்த வயிறு. அதை வச்சுத்தான் அவர் யாருனே உறுதி செஞ்சேன். அப்பாவோட நண்பர். இந்த விதி இருக்குதே.

     “அங்கிள்...”

அவளிடம் கேக்கலாம்னு யோசிச்ச கேள்வி தானவே வெளிய குதிடுச்சு.

     “டைம்... என்ன அங்கிள்”

என் பக்கத்து சீட்டில் அமர்ந்தவர், ‘ஏண்டா எதிர்பார்க்காம இரண்டு பேரும் சந்திருச்சுக்கோம். பார்த்தவுடனே முதல டைம் என்னனா கேட்ப’ அலுத்துக் கொண்டவர், பேசத் தொடங்கினார், பேசுனார், பேசுனார் நிறுத்தமே இல்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்-ஏ தோற்றுவிடும் அளவிற்குப் பேசினார். இறுதியாய் ஒரு முடிவு வந்தது, அவருக்குக் கொட்டாவி வந்த பின்னால். அப்போ ஒரு நல்ல விஷயம் செய்தார்.

     “தம்பி... உன் சீட் எது...”

     “36 லோயர் அங்கிள்...”

     “நல்லதா போச்சு. எனக்கு அப்பர் பெர்த். மூட்டு வலி. நீ மேல போய் படுத்துக்கோ கண்ணா.”

     அவரது மூட்டுவலி என் தோழிய பார்க்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துருச்சு. என்னது தோழியா... அகன்ற உங்கள் வாயை மூடுங்கள். இது மேகி தலைமுறை. இரண்டு நிமிசத்துல நட்பு மலந்துரும். ஒரு நாள்ல காதல் துளிர்விடும். இரண்டாவது நாள்ல கல்யாணம் நடக்கும். மூணாவது நாள்ல குழந்தை கூட பிறக்கலாம். யார்ய்யா அது காரி துப்புறது. நோ....

     தோழி கையில் பன்னாட்டு மொழியாம் ஆங்கில மொழி நாவல். அப்போதிருந்து நான் ஆங்கில மொழியை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டேன். இப்போது ஆங்கிலத்தில் ஒரு வசனம் யோசிக்கணும். கண்டுபுடிச்சேன்.

     “எக்ஸ்யூஸ் மீ...”

இப்ப யாருங்க விளக்க அணைச்சது. கீழே இருந்து மேலே வந்தது ஒரு வாய்ஸ்.

     “குட் நைட் தம்பி”

நடுவுல இந்த அங்கிள் என்ட்ரிய கட் பண்ணி இருந்திருக்கனுமோ. தப்பு பண்ணிட்டோமே. வீடியோவா இருந்த கூட பரவாயில்ல எடிட் பண்ணிடலாம். இது கதையா போச்சே.

     இருட்டுல அவ தூங்குற அழக கற்பனை பண்ணிட்டே காலத்த அதோட வேலைய பார்க்க அனுமதிச்சேன். அது போய் சூரியன இழுத்துட்டு வந்துருச்சு. இந்த உலகம் காலைனு அதுக்கு ஒரு பேர வச்சிடுச்சு.

     எதிர் இருக்கையில் பார்த்தேன். என் காதலி கிளம்பி போயிருந்தாள். எப்ப எழுந்து எங்க இறங்கியிருப்பா. காலங்காத்தால இவ்வளவு யோசிக்க கூடாதே. அவள் துயில் கொண்டிருந்த படுக்கை மீது ஒரு ஹேர்பின் கிடந்தது. கையை எட்டி அதை எடுத்தேன். என் சென்சார் தப்பாக புரிந்து கொண்டு இரவில் அவளிடம் சொல்ல வேண்டிய வசனத்தை இப்போது ஒலிபரப்பியது.

     “பை த வே, யூ லுக் சோ கார்ஜியஸ்.

என் விதி. என்ன செய்ய. ஆசான் வடிவேலு சொல்வது போல 'வட போச்சே'னு முகத்தை வச்சுட்டு கீழ இறங்குனேன். யாருமே இல்லாத இருக்கைகள் என்னை வெறித்தன. வெளியே வந்து பார்க்கிறேன். ஜேலேபிய பிச்சு போட்டு ரயில்வே அறிவிப்புகள் சுவத்துல சிதறி கிடக்கின்றன.

     நிறுத்துங்க, இது என் கதை தான். நான் தானே என்ன நடக்கனும்னு முடிவு செய்யணும். எனக்குள் உறங்கிட்டு இருக்கிற குரங்கு கதைல கூட நல்லது நடக்க விட மாட்டேங்குது. இருக்கிறதெல்லாம் அழிச்சிட்டு திரும்ப முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஓகே, வா...

     அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். திடீரென...

-பிரபாகரன் சண்முகநாதன் 

(செப்டெம்பர் 2017)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...