முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடைபடும் நாட்குறிப்புகள் - 3

சூரியனை மறைக்கும் மேகக் கூட்டமளவிற்கான ஆறுதல் எனக்கு போதுமானது. புதிய சூழல் அப்படியான உலகை கட்டமைக்கிறது.

புதிதாக ஒன்று இருப்பதாலேயே சில நேரங்களில் பிடித்துவிடும். அப்படியாகவே எல்லா நாட்களும் புதிதாகவே தொடர வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

வீணான என் நேரத் துளிகளை பயன்படும் இடத்தில் செல்லதக்கதாக்கும் முயற்சி தான் இப்போது செயல்பட வைத்துக் கொண்டிருப்பது.

மாற்றங்களே நம்மை இயக்குகிறது. கோபப்படும் போது குறையும் மூச்சு மழலையைக் கொஞ்சும் போது சீரடைகிறது.

தூசுக்களைக் களைவதில் கழிந்தது இன்றைய நாள். தமிழராய் இருந்தாலே சுண்டலும், பொறியும் கூடுதல் உணவு இன்று.

விசேஷங்களும் வழக்கமான அலுவல்களிலிருந்து சற்று விடுதலை தரும். அலுவல்கள் நூறு வருடம் முன்பும் இன்றும் வேறு வேறு. ஆனால் ஓய்வுக்கான விசேஷங்கள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் என்றும் ஒன்றே.

முழு உலகத்திற்கான சாளரம் சிறிதே. பறக்கும் வரை பற்றியிருக்கும் சாளரத்தின் கம்பிகள் நம்பிக்கையளிப்பவை. ஒரு வகையில் உந்திவிடுபவை. சாளரம் வழி நீ காண்பதே இவ்வளவு வெளிச்சமெனில் பறக்க தொடங்கினால் என்று நம்பிக்கையளிப்பவை. ஆனால் காற்றின் போக்கு, கால மாற்றம், அலைகழிப்பு நடைமுறை சிக்கல்கள். எதிர் நீச்சல் பட்சிகளின் சிறகுகளில்.

மதுவில் திளைத்த அப்பா சாய, பேருந்தில் உடன் வரும் மகன் தரும் தோள், எதிர்காலத்திற்கான நம்பிக்கை கோல். நான் அதனை இறுக்கி பற்றியிருக்கிறேன்.

( 18/10/2018 07:29 பி.ப . )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...