முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பற்றி எரியும் பனி


தனிமையின் இறுக்கத்தில்
உன் நெருக்கத்தை
உணருகிறேன்

அடர் பனி கோதும்
என் வெற்றுடம்பில்
படர்ந்திருக்கின்றன
கீறல்கள்

இரக்கமற்று
வீழ்த்தப்பட்ட நிலையில்
கிடக்கிறேன்
சடலமாய்

சிதைகாயங்களில்
உணவு தேடியலைகின்றன
ஈக்களும் வண்டுகளும்
ஒட்டுண்ணிகளும்

தன் விருப்பத்திற்கு
விளையாடுகிறது
என்னைப் போலவே
மெருதுவான பனி
பிரக்ஞைகள்
ஏதுமற்றே நான்

இன்னும் சற்றுநேரத்தில்
என்னைச் சுற்றி
பெருந்திரள் கூடிவிடும்

காக்கி உடைகளும்
வெள்ளை உடைகளும்
வரத்தான் போகின்றன

நான் எவ்வாறு
அடையாளம் காட்டுவேன்
யாரை சாட்சிக்கு
அழைத்து வருவேன்

காற்றைக் கிழித்த
என் கதறல்களை
கேட்டு நின்றது
நடுநிசி இரவு மட்டுமே

அதுவும் செய்வதறியாது
கண்ணீராய்
பனியை சிந்திக்
கொண்டிருந்தது

என்னை மொய்க்கும்
கேமரா கண்களின்
வழியே காணும்
கோடி ஜோடி கண்களில்
நீயுமிருப்பாய்

கனவுகூட கண்டிருக்க
மாட்டாய் தான்
உன் வரவேற்பறையில்
நான் இப்படி நுழைவதை

சகித்துக் கொள்ள கூட
முடியாது தான்
உன் கதாநாயகி
கூவ நதியின் ஓரத்தில்
கொப்பளிக்கும்
நாற்றத்தினிடையே
பிழையே செய்யாமல்
தண்டிக்கப்பட்டு
வீசப்பட்டிருப்பதை

பிழை
பிழை
பெண்ணாய் பிறந்தது
தானோ பிழை...

விசாரணையென்ற பேரில்
நீயும் அலைய
வேண்டியிருக்கும்
இப்பாவியை கரம்பிடிக்க
துணிந்த காரணத்தினால்

அன்பிற்குரிய காதலா
நீயெனக்கு நீதியெல்லாம்
பெற்றுத் தர வேண்டாம்

இல்லாத நான்
அதை கொண்டு
என்ன செய்ய

ஒன்று மட்டும் செய்
எனக்காக

உனக்கு பிறக்கப்
போகும் மகனின்
பதின்பருவத்தில்
பெண் குறித்த புரிதலை
சொல்லிக் கொடு

அதுவே போதுமானது
எனக்கும்
என்னைப் போன்றோருக்கும்

-பிரபா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...