முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்பாட்டு நகரமும் புத்தக திருவிழாவும்

காரைக்குடி 11/02/2017

காரைக்குடியில் புத்தக திருவிழா என்று
கேள்விபட்டதும் காற்றில் எகிறிக் குதித்த என் மனதின் உற்சாகம் நேரில் அதன் தோற்றத்தை கண்டவுடன் ஊசியின் முனைப்பட்ட பலூன் போல சுருங்கி இளைத்து பின் மொத்தமாக மடிந்துவிட்டது.

கலை இலக்கிய நகரமான காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தான் பல ஆரம்ப கால பதிப்பகங்களும் அச்சுக் கூடங்களும் தொடங்கப்பட்டு இயங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்த புத்தக திருவிழாவைப் பார்த்த யாருக்கும் அதன் மேல் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உண்டு.

கம்பன் மணிமண்டபத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த புத்தக திருவிழாவுக்கு சென்ற போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். விளம்பரத்தில் 50 அரங்குகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இருந்தது 20 க்கும் குறைவான புத்தக விற்பனையாளர்களே. பதிப்பகங்கள் என்று பார்த்தால் கிழக்கை தவிர யாரும் இல்லை. காரைக்குடியில் இயங்கி வரும் CBSE தர பள்ளிகள் சில இடம்பெற்றிருந்தன. கோவிலூர் மடாலயம் சார்பில் ஒன்றும் குன்றக்குடி அடிகளார் சார்பில் ஒரு அரங்கமும் எடுக்கப்பட்டிருந்தது. தவிர்த்து காரைக்குடியில் இயங்கி வரும் வள்ளி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இடம்பெற்றிருந்தன. மொத்தமே அவ்வளவு தான்.

எனக்கு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் காரைக்குடியிலேயே இயங்கும் பதிப்பகங்களும் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் பலவும் புத்தக திருவிழாவில் கலந்துக்கொள்ளவில்லை. காரணம் என்னவென தெரியவில்லை. பழமையான பதிப்பகங்கள் நிறைந்த நகரில் நடைபெறும் திருவிழாவில் பல அறிய பதிப்புகளை சேகரிக்க முடியும் என்கிற எனது கனவுகளையெல்லாம் உடைத்துவிட்டு ஏமாற்றமே எஞ்சி நின்றது.

கம்பன் மணிமண்டபமே பராமரிப்பு இன்றி காட்சியளித்தது கவலைக்குரியது. சிதைப்பட்டு நிற்கின்ற ஆலயம் போல் காட்சியளித்தது. மக்கள் கூட்டமும் பெருமளவில் இல்லை (விடுமுறை நாளில் கூட). பொழிவை இழந்து காட்சியளித்து கொண்டிருந்த நிகழ்வில் இருந்து வெளியேறும் போது எடுத்த செல்பி கூட தெளிவற்று இருந்தது, புத்தகங்களை காணாது வாடும் காதலர்களின் மனநிலையைப் போல (மிகச்சில நல்ல தொடர்புகள் பெற முடிந்தது மட்டுமே இந்த நாளின் பயன்).

-பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...