முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகிழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரும்பின் மடல்

An oak tree is a daily reminder  
that great things often have small beginnings.
-Matshona Dhliwayo

இடது கையை மேலாக தூக்கி கைபேசியை உயர்த்தி அதில் செருகப்பட்டிருக்கும் செல்ஃபி ஆப்பின் வழியே தன்னைத் தானே படம் எடுத்து உங்கள் பார்வைக்கு பதிவிடும் வழக்கமான செயலின் மாறுபட்ட வடிவம் தான் இந்த தளத்தின் தொடக்கம். அதில் என் முகத்தின் வழியே உணர்ச்சிகளைப் படிப்பீர்கள். இதில் எழுத்தின் வழியே. வேறுபாடு அவ்வளவே.

இயற்கையாகவே நான் அதிகம் பேசக் கூடிய கதாபாத்திரம் இல்லை. அறிமுகமானவுடனே கவர்ந்து விடும் அளவிற்கு ஹாஸ்யம் கூட நிறைந்தவன் இல்லை. அந்த தயக்க குணமே என்னை எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் பிடிப்புள்ளவனாக்கியது.

என்னிடமிருந்து எவ்விதமான செய்திக்கும் உடனடி எதிர்வினையும் எளிதில் கிடைத்து விடாது. நான் அதற்கிட்ட பெயர் சோம்பல். என் அப்பாவின் வார்த்தைகளின் படி 'ஃபிரசன்ஸ் ஆப் மைண்ட்' குறைவு.

எந்த செயலுக்கும் ஒரு தூண்டுதல் உண்டு என்கிற அறிவியல் விதிப்படி இத்தளத்தின் தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. நான் பேச விரும்புகிறேன் - இந்த ஒற்றை வரியிலிருந்து தான் முகிழ் என்கிற வலைப்பூ முகிழ்ந்திருக்கிறது.


கணக்கியலில் குறிப்பிடப்படும் திருத்தியமைக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று Materiality Principle என்பது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு மிகச் சரியாய் தெரியவில்லை. அதன் பொருள் முக்கியத்துவம் அற்ற, தொடர்பில்லாத விஷயங்களை புறக்கணித்து விடலாம் அல்லது வேறு ஏதாவதுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது. அதற்கேற்ப இதில் தேவையில்லாத பொருத்தமில்லாத பதிவுகளை எழுதப் போவதில்லை என்பது என் உறுதியான நிலைப்பாடு. முக்கியத்துவம் எது என்பதற்கான வரையறையிலே பல்வேறு குழப்பங்கள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை முதலில் நான் விளங்கி கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் (!).

இந்த சிறு பையனின் சிறு முயற்சி இத்தொடக்கம். இதில் நான் செய்ய போகும் பிழைகளை செய்வதற்கு முன்னே சொல்லி மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.

- கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதி கவிஞனாக முயற்சிப்பவன் என்று சப் டைட்டில் போடுவது
- சமூக அக்கறை குறித்த கட்டுரைகளை அரைவேக்காட்டு தனத்துடன் சமைப்பது
- வாசித்த புத்தகத்துக்கு மதிப்புரை என்ற பெயரில் புத்தகம் எழுதியவரை விட அதிகம் யோசித்து எழுதத் துணிவது

இது போன்ற பிழைகளுடன் உங்களுக்கு தோன்றவிருக்கும் குற்றங்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கடிதத்தை சமர்பித்து விடுகிறேன். நிச்சயம் இவையெல்லாம் தொடராது பயில விரும்புகிறேன்.

உங்களுடன் என் எழுத்தின் வழியே பேசும் முயற்சி இத்தளம் என்பது ஒரு கோணம் என்றால், எனக்கான எழுத்துப் பயிற்சி என்பது மற்றொரு கோணம்.

முகநூல் உள்ள குறைகளில் ஒன்று பழைய பதிவுகள் பார்வைக்கு எளிதில் கிடைத்து விடாது. டைம்லைன் என்பது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒற்றை கோடு. ஆனால் வலைத்தளங்கள் அக்குறையை எளிதாக கலைந்து விடுகின்றன. அதுவே எனது குடிபெயர்ப்புக்கும் காரணம்.

ஈராயிரத்திற்கும் மேலான அகவை கொண்ட தமிழ் மொழியின் எழுத்துகளில் என் கை ரேகையும் பதிவது தமிழின் பெருமிதங்களில் ஒன்றே தவிர. வேறல்ல.

இறுதியாய் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து... (க்ளிஷே என்றெல்லாம் கலாய்க்க கூடாது. இது நம் பண்பாடு)

- பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...