முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு

முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன்.



இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது.

தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் துறை, இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உருக்கொண்டிருக்கிறது. இங்குப் பணிபுரிபவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதாக பொது பார்வையில் புரிந்துக் கொள்ளப்படுகிறது. “உனக்கென்னப்பா, ஐடி எம்ப்ளாயி" என்கிற வார்த்தைகளுக்கு பின் இருக்கும் மனநிலையைத் தெளியச் செய்ய இந்த நாவல் அவசியமாகிறது. நட்சத்திர அந்தஸ்தில் வாழ்பவர்களின் உலகம், நட்சத்திரவாசிகளின் உலகம் இப்படித் தான் இருக்கும் என அவர்களின் வாழ்க்கையை பற்றிய மதிப்பீடுகளுக்கு முறிவு மருந்தாக எழுதப்பட்டிருக்கும் நாவல் ‘நட்சத்திரவாசிகள்’.

பிசிறில்லாத நாவலின் நடை அத்தனை இலகுவாக அதனுள் செல்ல அனுமதிக்கிறது. ‘ஊர்ல எங்க வீடு ஒன்றரை கிரவுண்ட் சார். ஒரே சமயத்துல இருபது பேர் அடுத்தவங்க மேல கை கால் படாம படுத்துத் தூங்கலாம்.’ அலுவலக உதவியாளரான ராமசுப்புவுக்காக வண்டி ஓட்டிவரும் டாக்சி ஓட்டுநரின் வார்த்தைகள் இவை. தங்கள் ஊரைத் தொலைத்து நகரத்தில் அலையும் அத்தனை பேரின் கதையும் அது தான்.

ஐ.டியில் பேர் சொல்லி அழைக்கிற அளவுக்கு கூட சுதந்திரம் இருக்கும். ஆனால் எதிர்த்துப் பேசிவிட மட்டும் முடியாது. எந்த அலுவலகமும் தனக்கே உரிய அதிகார படிநிலையைக் கொண்டிருக்கிறது. சத்தி, வேணு, அர்ச்சனா, ஆர்.கே, சாஜு எனத் தனது சீனியர்களுடான வாழ்வு நித்திலனுக்கு எட்டு வருடங்களாகப் பழகியிருக்கிறது. சராசரி தமிழக இளைஞன். மிடுக்கும் ஆங்கில தொனியும் தெரியாதவன். நித்திலனோடு கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். இத்தனை வருடங்கள் இங்குப் பணி புரிந்தும் இன்னும் தள்ளிப் போகும் பதவி உயர்வுக்காக வருத்தப்படும் ஒருவன்.

நித்திலன் மணந்து வந்திருக்கும் மீராவோடு வாழ முடியாது தன்னை எப்போதும் அலுத்துக் கொள்கிறான். தன் வேலையை அலுத்துக் கொள்கிறான். அலுவலகத்தில் தான் தினமும் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிலையில் உள்ள ஜெப்-இன் அழுத்தம் ஒரு புறம். ஒரு சிக்கலான சூழலில் உழலும் அவனைச் சுற்றிய உலகம் அதை விட மேலும் சிக்கலானது.



ஐடி ஊழியர் (மாதிரி படம்)

இங்கு உங்களுக்கு எத்தனை வருட அனுபவம் என்பதெல்லாம் முக்கியமே இல்லை. பதினைந்து வருட உழைப்பும் ஒரே நாளில் பறிப்போகி விடக்கூடும். வேலைக்கு உத்தரவாதம் என்பதெல்லாம் உங்கள் வாயிலாக நிறுவனம் இலாபம் ஈட்டினால் மட்டுமே சாத்தியம். அப்படியே இலாபக்கணக்கில் இருந்தாலும் மேல் உள்ள தலைவர்களின் நல்லெண்ண பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் நீங்கள் நாளைய செலவுக்கு கூட யோசிக்க வேண்டி வரும்.

அபாயம் என்பது இது தான். நீங்கள் பந்தயம் கட்டியக் குதிரை இனி ஓடாது என பாதி வழியில் சுருண்டு விழுவதுப் போல. உங்கள் வாழ்க்கை மொத்தமும் உங்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் கூட, இந்த ஊசலினால் அல்லலுறும் என்பதே சிக்கல். எதிர்கொள்ளும் பணியிட சிக்கல்களைக் கூட பொருத்துப் போக வேண்டி அல்லது பொருத்ததுப் போல நடிக்க வேண்டியதாகி விடுகிறது. இதில் வரும் வருவாயைக் கணக்கிட்டு மாத தவணையில் வாங்கிய கடன்களின் தவணை குறித்த கவலை வாட்டி எடுக்கும். ஒரு வகையில் நாவலில் ஒரு இடத்தில் சொல்வது போல் இது ஒரு சிக்கலான வலை தான்.உள்ளே நுழைந்துவிட்டால் வெளியேறுவது அவ்வளவு எளிதல்ல.

இத்தனை ஆபத்து இருந்தாலும், இந்தப் பிரம்மாண்டம் அள்ளிக் கொடுக்கும் வசதிகள் மறுபுறம். விவேக்-க்கு நடந்தது அது தான். கிராமத்தின் பெயர் கூடத் தெரியாத ஊரிலிருந்து அமெரிக்கா சொல்வதெல்லாம் இங்கு மட்டுமே நடக்கக் கூடியது. அதற்கு கொடுக்கும் விலை பெரிது. தன் காதலியை நினைத்து வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது.


எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் உருவாக்குகிற நாவல் உலகம் என்பது நம்மையும் பார்வையாளராக இணைத்துக் கொள்கிறது. சஞ்சீவ் (சாஜு) தன்னுடைய உழைப்புக்கு சரியான உயர்வு கிடைக்காத போது அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறான். அப்படிச் சொன்னாலாவது தான் மதிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தைக் கசக்கிக் குப்பையில் எறிகிறார்கள் மேலாளர்கள். இங்கு நீங்கள் செய்துக் கொடுக்கிற வேலையை அதை விட பாதி விலையில் செய்துக் கொடுக்க இன்னொருவர் தயாராக இருப்பார் என்பது கொடுக்கும் அழுத்தம் -உணர்ந்தால் தான் தெரியும் போல.

பள்ளி முடித்து வரும் மாணவர்களைக் கூட பயிற்சியும் கல்வியும் அளித்து அவர்களின் பணியை குறைந்த ஊதியத்தில் பெற்றுக் கொள்கிறது நிறுவனம். இலாபத்தின் மீது மட்டுமே தன் கண்களை கொண்டிருக்கிறது.

வேலை கிடைத்தும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நிற்கும் போது செக்கில் நின்று விடும் மாடுகளை விரட்டும் கோல் போல ஒன்று மேல் வந்து ஒன்று விழும். மீண்டும் முதலில் இருந்து ஓட வேண்டும். ரேட்டிங், கஸ்டமர் சேட்டீஸ்பேக்சன், அப்ரைசல், ஆன்சைட் என ஓடுவதை உறுதி செய்யத் தான் இத்தனை அளவுகோல்களும்.

பார்கவி அழுத்தம் தாங்காது தன் மனநிலையே தவறும் கோட்டுக்குச் செல்கிறாள். மனம் பிறழ்ந்த நிலையில் அவளது செயல்கள், பயமுறுத்தக் கூடியது. ஆனாலும் வாழ்க்கை நமக்கு ஒன்றைக் கையளிக்க வேண்டும் என்றால் நாம் அதற்கு ஒரு ஈடு கொடுத்தாகவே வேண்டும்.

அகம் புறம் என பாத்திரங்களின் உணர்வுகள் செயல்கள் எல்லாவற்றையும் தெளிந்த மொழியில் எழுத்தாளர் சொல்லும் போது இந்த நாவல் முழுவதும் நாம் நடப்பவற்றை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு இடத்திலும் நாவலாசிரியர் இடைப்பட்டு நியாயமோ தெளிவுரையோ கொடுக்க முற்படவில்லை. நாவல் தன்னை தானே நியாயப்படுத்திக் கொள்கிறது.

அர்ச்சனா, மீரா, பூஜா, பனிமலர், பிச்சைமணி, டெய்ஸி -என கதையின் பெண் பாத்திரங்கள் அத்தனை தூரம் நேர்மையாக உருவகப்படுத்தப்படுகிறார்கள். கதையின் முதல் அத்தியாயத்தில் சுத்தம் செய்யும் பிச்சைமணியின் வார்த்தைகள் இவை, ‘காத்தும் வெயிலும் படாம என்னத்தைக் காணப் போறோம்னு சொல்லு. எப்படித்தான் நாள் முழுக்க இந்த அடைச்ச ரூமுக்குள்ள வேலை செய்யுதுங்களோ தெரியலை. அதனாலதான். என்னமோ வெளியில வந்தா இதுக அந்தக் கூத்தடிக்குதுங்க.’ இப்படி எதார்த்தமாக பேசும் பெண் குரல்கள் நாவல் முழுவதும் பரவலாக தென்படுகின்றன.

ஆண்களை விட பெண்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும் அந்த முடிவுக்காக எல்லை வரை போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மீரா ‘ராகுல் வேண்டாம்’ என முடிவெடுக்கும் போதும் ‘நித்திலன் தன் உணர்வுகளை மதிப்பதில்லை’ என முடிவெடுக்கும் போதும், அர்ச்சனா தன் மகள் பவிக்குட்டிக்காக தன் நேரத்தைச் செலவழிக்க முடிவதில்லை என்றபோதும் வேலைக்காக அவள் நிற்கிற முடிவுகளும், பூஜா தனக்கு இரண்டாவது குழந்தை குறித்து எடுக்கும் முடிவும் காட்டுவதெல்லாம் ஒன்றை தான் - பெண்கள் மனது அலைபாய்வதில்லை. அவர்கள் உலகத்தில் யூகத்தை தாண்டி கொடுமையாக எதுவும் நடந்துவிடுவதில்லை.

நித்திலன், சாஜு, வேணு, விவேக் என எல்லோரும் சஞ்சலப்படுகிறார்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்காக யோசித்து தங்களை வலிந்து வருத்தப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியான ஆண்-பெண் மனநிலையில் இந்தத் துறை என்னவாக தாக்கம் செலுத்துகிறது என ஒரு கோணத்தில் நாவலை வாசிக்க முடியும்.

தம்பி ராமையா ஒரு படத்தில் சொல்வது போல, “துக்கப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு…” என வாழ்க்கை பூச்சாண்டி காட்டிய பிறகு நல்ல நிலைக்கு வந்துவிடுவோமா எனக் கேட்டால், “அதுவே பழகிடும்” எனப் பதில் வரும். அப்படியாக தான் இலட்சக்கணக்கில் விளக்குப் பூச்சிகளாக இளைஞர்கள் ஐ.டி. தெருக்களில் உழன்றுக் கொண்டிருக்கிறார்களோ.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கல்வியும், வேலைவாய்ப்பும், பணிச்சூழலும் அவ்வாறாக தான் அமைகிறது. இதில் கிடைக்கிற பொருளாதார நிறைவு கூட வேறு துறைகளில் சாத்தியமாவதில்லை.

இந்தக் கட்டுரையில் கூட நான் உள்நுழைந்த நிறைய இடங்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நாவலில் பேச அத்தனை இருந்தும் ‘நான் ஒரு ஊடகம் தான். என் வழியே நீங்கள் இந்த உலகத்தைப் பாருங்கள்’ என அனுமதிக்கிற இயல்புக்கே இந்த நாவல் கொண்டாடப்படலாம். நிறைய கிளைக் கதைகள். பரப்பு அதிகம். இன்னும் கொஞ்சம் ஆழமாக விரிந்திருக்கலாம் எனத் தோன்றவும் செய்கிறது.

துறை சார்ந்த எழுத்துக்கள் வெகுவாக அருகிக் கிடக்கிற சூழலில் இந்த நாவல் எடுத்து வைத்திருப்பது முதல் அடி. இயல்பு வாழ்க்கையில் இத்தனை பிரபலமாக உள்ள துறையின் உள்ளிருந்து எழுகிற படைப்பு அத்தனை நிறைவாக இருக்கிறது.

இந்த நாவலுக்காக விருது பெறும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...