முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேய்ச்சியுடனான உரையாடல் - புத்தக விமர்சனம்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் உள்ளது என நம்புகிறவன் நான். எழுத்தாளர் திட்டமிட்டோ திட்டமிடாமலோ அந்த உயிருக்கான உருவத்தை அளித்துவிடுகிறார். அந்த உயிரை நீங்கள் அணுகும் போது உங்கள் தன்மைக்கேற்ப உங்களோடு அது உரையாடலை நிகழ்த்தும். நீங்கள் அதற்கு ஆட்படலாம் அல்லது தாண்டிச் செல்ல முயற்சிக்கலாம். அதனோடு மூர்க்கமாகச் சண்டை நிகழ்த்தலாம். ஆனால் ஒரு போதும் மறுதலிக்க முடியாது.

பேய்ச்சியின் உடனான உரையாடல் என்னை அச்சப்படுத்தியது. உடைந்து அழுக வைத்தது. மருண்டு சுருங்கி, இரவுகளில் நாக்கைத் துருத்தி யாரையாவது உடன் அழைத்துச் செல்ல வைத்தது. அப்போயின் வடிவில் என்னையே பார்க்க செய்தது. பேய்ச்சியின் பேராற்றல் முன்பு மண்டியிட்டுக் கதற வைத்து தண்ணென்ற அருவியாக தலை மேல் கொட்டித் தீர்த்தது.
எந்த புதிய களத்திலும் வாசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் அறிமுக சிக்கலைத் தவிர வாசித்து முடிக்கும் வரை வேறு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. மொழியின் சரளம் அவ்வாறானது.
இருவேறு காலகட்டங்களிடையே பயணிக்கும் கதை. இரண்டிலும் பொதுவான மனிதர்கள். ஒவ்வொருவருக்குமான பின்கதை, அவர்களின் இன்றைக்கான இடத்தை அடைய அவர்கள் கடந்து வந்த பாதை, அல்லது முன்கதையில் தொலைந்து போனவர்களின் வாழ்க்கை என எதிர்பார்ப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் குறைவில்லாது நகரும் போக்கு சுவாரசியமானது.
பழகாத களம் எனினும் எந்தவிதமான அன்னியத்தன்மையும் இல்லாத அளவிற்கு கதை நம்மோடு உரையாடுகிறது. பாவங்கள் என எதை எல்லாம் சொல்ல முடியும். எந்த அடிப்படையில் அவை பாவங்கள் ஆகின்றன. மனிதர்களின் உறவு எதுவரை, எந்தக் காரணி உங்களுக்கும் எனக்குமான உறவை வரையறுக்கிறது. புறச் சூழலின் பங்கு தான் நம்மைச் செலுத்துகிறதா அல்லது நம்மோடே உலாவும் மனிதர்களால் அறிய முடியாத ஆற்றல் வழி நடத்துகிறதா.
வாழ்வின் கேள்விகளுக்கே பதில் இல்லாத போது நாவலின் கேள்விகளுக்கு மட்டும் எங்கிருந்து பதில் கிடைக்கும். பதில் கிடைக்காத கேள்விகள் எஞ்சும் சூழலில் நாம் கண்டடையும் பதில் அறிவுக்குப் புறம்பானதாக கூட இருக்கலாம். ஆனால் மனதிற்கு அன்னியப்படாதது. பேய்ச்சியுடனான உரையாடலும் அப்படியானது தான்.

பேய்ச்சி (நாவல்)
ஆசிரியர்: ம.நவீன்
வெளீயிடு: வல்லினம் & யாவரும்
பாதிப்பு: 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...