முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெட்ட வார்த்தை கேட்பது என்பது...!

கெட்ட வார்த்தை பேசுவீர்களா? இந்த கேள்வியிலிருந்து தொடங்குவோம். ஆமாம், இல்லை, சில நேரங்களில் என்ற மூன்று ஆப்சன். எந்த வகை நீங்கள்?
Curse Images, Stock Photos & Vectors | Shutterstock
கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பது காலந்தோறும் தவறான, பொதுவில் பேசக் கூடாத, இழிவான ஒன்றாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் தெரிந்தே அது மீறவும்படுகிறது. அரசு பள்ளியில் கெட்ட வார்த்தைகளைப்  பேசுகிற மாணவர்களோடு படிக்க நேரும் என்று கான்வென்ட் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள், ஆட்டோ குறுக்க போனா கூட பேசும் நல்ல வார்த்தைகளை எதில் சேர்ப்பது என தெரியவில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் தான் கெட்ட வார்த்தைகள் புழங்குகிறதா.

சமூக வலைத்தளங்கள் அறிமுகம் முகத்தை மறைத்துக் கொண்டு சமூகத்தோடு உரையாடும் வாய்ப்பை வழங்குகிறது. இங்கு வழக்கத்தை மீறுகிற கலகக்காரர்கள் கொண்டாடப்படுவர். அப்படியான அங்கீகாரம் கெட்ட வார்த்தைகளுக்கான கட்டுகளைத் தளர்த்த தொடங்கியது.

இன்றைக்கு சமூக வலைத்தளத்தில் கெட்ட வார்த்தையைப் பேசுவது என்பது பெரிய குற்றம் இல்லை.  சரியான பகடியோடு கோர்க்கப்படும் வசனங்கள் கொண்டாடப்படுகின்றன. பிடிக்காத அரசியல் எனில் வசவுகள் தாறுமாறாக பொழியப்படுகின்றன எதிர் பக்கத்தில் இருந்து. எதற்கு எது எதிர் என்று கேள்விலாம் கேட்கக் கூடாது. நீங்க படிச்சா உங்க சொத்து. நான் படிச்சா என் சொத்து. வசவுகளும் பொது தமிழின் அங்கமாகிவிட்ட காலம் இது.

கெட்ட வார்த்தைகள் கேட்பது என்பது சுவாரசியமான ஒன்று. கிரியேட்டிவிட்டி தன்னோட முழுமையை அடையும் இடம் வசவுகளில் தான். 

வடிவேலுவின் வசனம் ஒன்று, 'அவன் குடும்பத்த நான் கேவலமா பேசுவேன், என் குடும்பத்த அவன் ரொம்ப கேவலமா பேசுவான். இத நாங்க இரண்டு பேருமே ஒரு ஜாலியாவே எடுத்துக்கிறது' என கோவை சரளாவிடம் பேசுவதாக வரும்.  அவர் சாமாளிப்பதற்காக சொன்னாலும் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதிலும் கேட்பதிலும் உள்ள விடலைத் தனம் தான் அந்த ஜாலி.

பசங்களிடம் (ஆண் பசங்க) இரட்டை அர்த்தங்களில் பேசும் வாத்தியார்கள் மாணவர்களுக்கு நெருக்கமாகி விடுகின்றனர். ஆண்கள் தனியாக சேரும் இடங்களிலும் பெண்கள் தனியாக சேரும் இடங்களிலும் தன்னியல்பாக கெட்ட வார்த்தைகள் பெய்யத் தொடங்கிவிடும். ஆனால் இருவரும் உள்ள வகுப்பறைகளில், தன்னைக் கவனிப்பார்கள் என்ற வெட்கத்தில் கெட்ட வார்த்தைகள் காணாமல் போய்விடும். அதையும் மீறி குறும்புக் கார பையன் இரண்டு வார்த்தை கத்தி விட்டால் வகுப்பே குலுங்கி குலுங்கி சிரிக்கும். குறிப்பாக பெண்கள். 

பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளுக்கும் ரொம்ப தூரம். அதுலாம் இல்லை. இங்கு எப்படியோ அங்கும் அப்படி தான். ஆனா பசங்க பசங்கள பார்த்து பயப்பட வேண்டியதில்லை. ஆனா பொண்ணுங்க பொண்ணுங்க முன்னாடி நடந்துக்கிறது எல்லாம் அலங்காரமே தான். அத்தனை காதுள்ள சுவர்கள் அவர்களது உரையாடல். இரண்டையும் கேட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.
Group Of Girls With Speech Bubble Stock Vector - Illustration of ...
மறை பொருட்கள் பற்றி நாம் உருவாக்கி கொள்ளும் நாகரீக தடைகள் தான் கெட்ட வார்த்தைகளை ஈர்ப்புக்கும் சுவாரசியத்திற்கும் உரியவை ஆக்குகிறது.

பெருமாள் முருகனின் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்கிற நூலை சமீபத்தில் படித்தேன். சங்க காலம் தொடங்கி வழங்கி வரும் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வு அது. சென்ற தலைமுறை வார்த்தைகள் எப்போது கேட்க கூடாத வார்த்தையாக திரிகிறது என்பதைப் பற்றி விரிவாக நூல் பேசுகிறது. சங்க இலக்கியத்தில் ஏராளமாக பேசப்பட்ட பெண் உறுப்பு வார்த்தைகள் அச்சுக்கு வரும்போது மறைத்தும் திரித்தும் நீக்கியும் செய்யப்பட்ட பதிப்பு துறையின் கத்திரிக்கோலைப் பற்றியும் பெருமாள் முருகன் விமர்சிக்கிறார். 
கெட்ட வார்த்தை பேசுவோம் (Tamil Edition) eBook ...
வட்டார வழக்கில் புழங்கும் கெட்ட வார்த்தைகள் பலவும் தூய தமிழ் வார்த்தைகள் தான் என முடிவுக்கு வர முடிகிறது. பெரும்பாலும் பெண் உறுப்புகள், பாலியல் செயல்களே வசவுகளாக பேசப்படுகின்றன.

அவை அடங்கல், இடக்கரடக்கல் என்கிற பெயர்களில் மறைக்கப்பட்டு வந்தாலும் எஞ்சியவை நாம் புழங்கிக் கொண்டிருக்கும் அதே பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருகின்றன. தமிழின் தொன்மைக்கு சான்றுகள் தாம்.

நாட்டார் கலைகளில் இவை இன்றும் இருப்பினும் அவற்றில் பலவும் ஆவணப்படுத்தப்பாடமைக்கு காரணம் பொதுவில் நாம் உருவாக்கிக் கொள்ளும் நாகரீகம் என்கிற போர்வை தான்.

சங்க இலக்கியங்களும் கம்ப ராமாயணமும் காளிதாசரும் எழுதிய வார்த்தைகளை ஆபாசம் என்று தூற்றுகிறோம்.

சரி. என் கதைக்கு வருவோம். என்னோட வாழ்கையில் காந்தி பல நேரங்களில் உதவி இருக்கிறார். காந்தி முகம் பொறித்த காசை சொல்லவில்லை. அவருடைய சுய சரிதம்.

நான் முதல் முறையாக சத்திய சோதனை வாசிக்க தொடங்கிய போது காந்தி சிறிய வயதில் தாம் செய்த தவறை எல்லாம் உணர்ந்து அவருடைய அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்பார். நான் அப்போது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். கெட்ட வார்த்தைகள் அப்போ கொஞ்சம் பேசுவேன். ஆனா ப்ளோவா வராது (இப்போது கூட). பசங்களோட சேர்ந்து பீடி, சிகரெட் (ஒழுங்கா பிடிச்சதுலா இல்லை. இருந்தாலும்) எல்லாம் முயற்சி செய்து இருக்கிறேன். இதையெல்லாம் அப்பாவிடம் போயி ஒரு இரவு சொல்லி அழுத பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்.

அப்புறம் பத்து, பதினொன்னு, பன்னெண்டு படிக்கும் போது கிட்ட தட்ட நான் துறவியாவே வாழ்ந்தேன். கல்லூரியின் மூணு வருஷம் எல்லாத்தையும் கலைச்சு போட்டுடுச்சு. அவ்வளவு வார்த்தை பிரயோகம் இப்போ கேட்டுகிட்டது தான்.

வசவுகள் நமக்கு நெருக்கமான வட்டத்தில் பேசப்படும் போது என்டர்டெய்ன் செய்யும். வெளியே இருந்து ஒரு வார்த்தை வந்தாலும் வெறியாக்கிவிடும். அதை நினைவில் வைத்தே ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒரு சண்டை நடந்தேறும். பஞ்சாயத்து பேசப் போயி ரணகளமாக்கி விட்டதற்கு எவனோ ஆர்வக் கோளாறின் ஒரு வார்த்தை தான் காரணமாக இருந்திருக்கும்.

'வார்த்தை பொறுக்காதவன்' என எங்கள் வீடுகளில் பேசி கேட்டிருக்கிறேன். ஒரு சொல் கூட பொறுக்க மாட்டாதவன் என்பது ஒருவருடைய குணத்தை சொல்லுவது.

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு உங்கள் பதில் எதுவாக இருப்பினும் பிரச்சனை இல்லை. வார்த்தைகளாக கோபத்தைக் கொட்டிவிடுவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் தான். தேவையில்லாத இடத்தில் கொட்டிவிடுவது ஆபத்து.

வார்த்தைகளுக்கு என்று ஒரு பொருளும் இல்லை. நாம் எடுத்துக் கொள்ளும் மனநிலை தான். வார்த்தைகளில் எதுவும் இல்லை. வார்த்தைகள் தான் எல்லாமுமே.

***

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...