முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதர்களின் பேராசைக்கு இரையாகும் இயற்கை!

(ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் - தமிழில்: சி.மோகன் - நூல் வாசிப்பு அனுபவம்)
Wolf Totem - Magnet - Simon Haiduk Art
Courtesy: simonhaiduk
“ஓநாய்கள் மனிதர்கள் அளவுக்குத் தீயவை அல்ல”
நாவலில் இடம்பெறும் இந்த ஒற்றை வரி தான் ஒட்டுமொத்த கதையின் அடித்தளம். ஓநாய்களை சொர்க்கத்தின் தூதுவர்களாக வழிபடும் மங்கோலிய மக்களிடையே பணியாற்ற வரும் ஹேன் சீன மாணவர்களான ஜென் சென் மற்றும் யாங் கீ ஒரு ஓநாய் குட்டி வளர்க்க முயற்சி செய்யும் கதை தான் ஓநாய்குலச்சின்னம். மேய்ச்சல் நிலத்தின் அரசனான ஓநாய்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்பட்டன, மனிதர்களின் பேராசை, வளர்ச்சி, அதிகாரம் போன்றவற்றையும் இதன் காரணமாக சிதைந்த இயற்கையையும் கதை பேசுகிறது.
அடிப்படையில் இந்த நூல் ஒரு தன் வரலாற்று நூல் வகையை சேரும். சீனாவில் ஏற்பட்ட கலாச்சார புரட்சியின் விளைவாக கிழக்கு உள்-மங்கோலியாவிற்கு அனுப்படும் ஜியாங் ரோங்-இன் வாழ்கை அனுபவங்களே இந்த நாவல்.

ஜென் சென் மங்கோலியர்கள் வழிபடும் ஓநாய்களை நேசிக்க தொடங்குகிறான். ஓநாய்களைப் பார்த்து பயப்படும் அவற்றை தீய சக்தியின் உருவமாக பார்க்கும் சீன மக்களிடையே இருந்து அவன் வந்திருப்பதால் தீயவற்றை செய்யும் ஓநாய்களை எப்படி இவர்களால் நேசிக்க முடிகிறது என்கிற கேள்வியின் ஆர்வத்தில் அவற்றை குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள விரும்புகிறான்.

மங்கோலிய இனக்குழுவின் தலைவரான பில்ஜி அவனுக்கு வழிகாட்டுகிறார். ஓநாய்களை வணங்கும் கலாசாரத்தை நம்பும் கடைசி பிரதிநிதி அவர். ஓநாய்களிடம் இருந்து அந்த மக்கள் பெற்ற போர் வியூகம், ஆற்றல், தீரம், நுண்ணறிவு பற்றி பல்வேறு சூழல்களில் ஜென் அவதானிக்கிறான். 
மேய்ச்சல் நிலம் பெரிய உயிர். மனிதனும் ஓநாயும் மற்ற எல்லாமும் கூட சிறிய உயிர்கள் தான் பில்ஜி அவனுக்கு போதிக்கிறார். ஒரு கிழட்டு ஓநாய் போல தோன்றும் அவருடன் ஜென் செல்லும் வேட்டைகள் அவனுக்கு அந்த நிலத்தின் பல்வேறு சூட்சுமங்களை கற்கும் வாய்ப்பாக அமைகிறது. நாடோடி மக்களான அவர்கள் ஓநாய்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் தங்களுடைய கால்நடைகளின் பாதுகாப்பிற்காக. ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தைப் பாதிக்கும் வயல் எலிகள், மர்மோட்டுகள், மான்கள், குதிரைகள் என மற்ற விலங்குகளை தங்கள் உணவுக்காக வேட்டையாடுவதன் மூலம் மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படாது காக்கின்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் மங்கோலிய மக்கள் அதனை ஆன்ம அளவில் வணங்கவும் பாதுகாப்புக்காக சிலவற்றை கொள்ளும் வேட்டைகளையும் மேற்கொள்கின்றனர்.
Shadow Gun Images, Stock Photos & Vectors | Shutterstock
Illustration
இந்த நடைமுறை இந்நிலத்தைப் பற்றி அறியாதவர்கள் அங்கு வரும் போது சீர்குலைக்கிறது. அவர்கள் ஓநாய்களால் தன அந்த நிலம் பாழ்படாது செழிப்போடு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து தங்கள் பேராசைக்காக அதிக கால்நடைகளை வளர்க்க விருப்பப்பட்டு வெடி மருந்து, விஷம் என அறமற்ற வழிகளில் ஓநாய்களைக் கொல்லுகின்றனர்.
இதற்கிடையில் ஓநாயை நெருக்கமாக அவதானிக்க விருப்பம் கொண்டு ஒரு ஓநாய்க்குட்டியை ஜென்னும் அவன் நண்பனான யாங் கீ-உம் வளர்கின்றனர். நினைவில் காடுள்ள மிருகம் என்பதை போல ஓநாய் தன்னுடைய பிறப்பின் நோக்கமான சுதந்திரத்தையும் பழக மறுக்கும் விடாபிடி குணத்தையும் கொண்டு போராடி அதன் விளைவாகவே இறந்தும் போகிறது. பிறப்பிலேயே வெளிப்படும் அதன் புத்திக் கூர்மை, போராடும் குணம், நுண்ணறிவு, வீரம் போன்றவற்றால் தான் அவை இந்நிலத்தின் அரசனாக வாழ்கின்றன என்பதை ஜென் பயில்கிறான். அதனை வளர்க்க தான் எடுத்துக் கொண்ட செயலின் குற்ற உணர்ச்சியால் வருந்தவும் செய்கிறான்.

மனிதர்களின் அதிகாரத்திற்கும் இயற்கைக்கும் ஆன போர் பல்வேறு கட்டங்களில் இந்நாவலில் வெளிப்படுகிறது. மங்கோலிய நிலத்தின் தன்மையை ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மாறும் விதத்தை, ஓநாய்கள் எவ்வாறு புல்வெளிகளை நாசம் செய்யும் உயிர்களை உணவாக்கிக் கொள்கிறது, ஒவ்வொரு விலங்கிற்கும் அது கையாளும் போர்த் திறம், கூட்டாக செயல்படும் அதன் ஒற்றுமை என ஓநாய்களைப் பற்றி முழு திறனாய்வு தொகுப்பாக இந்நாவல் விரிகிறது.
நம்பவே முடியாத அதன் ஆற்றலுக்கு சாட்சிகளாக சுவர் ஏறி ஆட்டு மந்தைகளை பலியாக்கும் காட்சி, மான் வேட்டை, குதிரை படுகளம் என மெய்சிலிர்க்கும் பகுதிகளால் நிரம்ப பெற்றது இந்நாவல்.
ஜென் சென் மங்கோலிய பிறப்பு இல்லையெனினும் ஓநாய்களை நேசிக்கிறான். அதிகாரியாக வரும் பாவோ மங்கோலிய வேர்களைக் கொண்டிருப்பினும் ஓநாய்களைக் கொன்று குவிக்கிறார். பில்ஜி, உல்ஜி உள்ளிட்ட குழுத் தலைவர்கள் தங்கள் உயிரினும் மேலாக அவற்றை வணங்குகின்றனர். நாளைக்கு தாங்கள் இல்லையெனினும் ஓநாய்கள் இருப்பின் மேய்ச்சல் நிலம் வளத்தோடு இருக்கும் என நம்புபவர்கள். இவர்களைத் தவிர்த்து நாவலில் வரும் மனிதர்கள் இரண்டு விதத்தில் பிரிந்து தங்கள் வாதத்தை வைப்பவர்கள். இப்படி பொதுவாக சொல்லலாம் ஓநாய்களை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள். கடைசியில் வெறுப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். நிலம் தோல்வியடைகிறது.
30 வருடங்களில் நிலம் பாலைவனமாகிவிடுகிறது. அதற்கு காரணமான யாருக்கும் அது பெரிய வழியாக இருக்கப் போவதில்லை. ஆனால் ஜென்னுக்கும், பில்ஜி வழி வந்தவர்களுக்கும் அது மாறாத வடுவாக பதிந்து நிற்கிறது.
அந்த வலி தான் நாவலின் உச்சகட்டம். இயற்கையின் மாசற்ற அதே நேரத்தில் நேர்த்தியான ஒரு உயிரினத்தை அதன் வாழ்விடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த மனிதகுலத்தின் மோசமான வரலாறின் பதிவாக இந்நாவலை நான் பார்க்கிறேன்.

உலகின் பெரும்பகுதியை தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்த செங்கிஸ்தான் வழிபட்டு பின்பற்றிய ஓநாய்கள் கடந்த கால காற்றோடு கரைந்து போய்விடுகிறது. 
ஓநாய்க்குட்டியை எங்கிருந்து எடுத்தார்களோ அந்த குகைக்கு திரும்பி வரும்போது யாங் கீ, ஓநாய்க்குட்டியை அழைக்கும் போது கண்கலங்கி விட்டேன். நமக்கு விருப்பத்துக்குரிய ஒருவரை இழந்துவிடும் சோகம் அது.

மகத்தான இயற்கைக்கும் பேராசை மனிதர்களுக்குமான போரின் ஒரு பாகத்தைத் தரிசிக்க இந்நாவல் உதவும். இயற்கை பாழ்பட்டு போகும் போது நாமும் தான் ஆற்றல் இழக்கிறோம் என்பதை நுண்மையான விவரிப்பில் வாசிக்க தரும் நாவல் இது.

தனித்திருக்க வேண்டிய இப்பருவத்தில் இயற்கையை உணர கிடைத்த வாய்ப்பாக இந்நாவல் நிச்சயம் அமையும். இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் நெட்ப்ளிக்ஸ்-இல் பார்க்க கிடைக்கிறது.

மகத்தான நூல்.

ஓநாய் குலச்சின்னம் நாவல் / Wolf Totem tamil ...
Tamil Book Cover Image

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...