முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலர்: அத்தியாயம் ஒன்று


1

காத்திருக்கும் நேரம் கூடிக் கொண்டே போனது. கலந்தாய்வு எப்போ தொடங்கும் என தெரியவில்லை. காலை எட்டு மணியில் இருந்து நின்று கால் வலிக்க தொடங்கியது. பரந்து விரிந்திருந்த ஆடிடோரியத்தின் பக்கவாட்டு வாசலின் முன்பு ஆயிரக்கணக்கில் மாணவர் திரள். கையில் பைல்களோடும் கண்களில் கனவுகளோடும். அம்மாக்கள், அப்பாக்கள், சிலருக்கு தாத்தா, பாட்டி, கார்டியன் இப்படி.

மஞ்சள் நிறப் பூக்களும் உதிர்ந்த இலைகளின் சருகுகளும் கலந்து அந்த இடத்தை நிரப்பி இருந்தது.

முதல் அறிவிப்பு வெளியானது. மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லி.
கட்ஆப் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசையில்.
மாணவர்கள் எதற்கோ கட்டுப்பட்டவர்கள் போல அறிவிப்பைத் தொடர்ந்து பரபரப்போடு வரிசை பிரிந்து நின்றோம்.

அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து அதை விட 20 குறைந்த மதிப்பெண் வரை முதலில் உள்ளே அழைத்தார்கள்.

எல்லோரும் பி.காம் எடுக்க விரும்பினோம். முதல் இருபதில் என் பெயர் இருந்ததில் வியப்பேதும் இல்லை. பத்து, பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கும்போது மதிப்பெண் தான் எல்லாமும் என்று சொல்லித் தரப்பட்ட அறிவுரைகளினால் படித்து கொண்டே இருந்ததன் விளைவு. வேறு எதிலும் கூட நாட்டமில்லை. கண்ணாடி அணியும்போதே விளையாட்டையும் உதறிவிட வேண்டும்.

“சாதி சான்றிதழ் கொடுங்கப்பா” எதிரில் அமர்ந்திருந்த நான்கு ஆசிரியர்களில் ஒருவர் விண்ணப்ப எண்ணை சரிபார்த்தவாறே கேட்டார்.

“சாதி சான்றிதழ் இல்லை சார்” அப்பாவின் விடாப்பிடியான கொள்கையினால் கடைசி வரை சாதி சான்றிதழ் எடுக்கவில்லை. அரசுடைய எந்த சலுகையும் வேண்டியதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்தவர்.
பிற சாதிகள் அல்லது முன்னேறிய பிரிவில் என் பெயர் சேர்க்கப்பட்டது. 

முதலில் வெளியே வந்த ஐந்தில் நான் ஒருவன் மட்டுமே பையனாக இருந்தேன்.

நான் பையன் தான். விளையாட போனதில்லை. சண்டைக்கு போனதில்லை. வெளிய ஊர் சுற்ற சென்றதில்லை. நண்பர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் என் வீட்டுக்கோ வந்ததில்லை.

எங்கெல்லாம் எனக்கு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் துணையாக புத்தங்கங்கள் இருந்தன. இருக்கின்றன.

2

என் பெயர் கேட்டு திரும்பினேன். ஒரு பெண். முதலில் நம்ப மறுத்தாலும் நடந்தது அது தான். அறிமுகமே இல்லாத முகம். ஆனால் அழகானது. மஞ்சள் நிறப் பூக்கள் இவளிடம் இருந்து நிறத்தைப் பெற்றிருக்க கூடும். Cringe.

“கதிர், பீஸ் எங்க கட்டணும் தெரியுமா” முதல் வரியிலேயே ஏதோ ஆறாம் வகுப்புல இருந்து இப்போ வரை ஒன்றாக படிக்கிற பழக்கம் போல தொனித்தது. அப்படி இருந்திருக்க அவசியமில்லை. இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ.

“ஆபிஸ் முன்னாடி வெய்ட் பண்ண சொன்னாங்க. அங்க தான் கட்டணும்னு நினைக்கிறேன்”

“ஓ” இடைவெளி எடுத்துக் கொண்டு யோசித்தவள் போல “ம். நீ முன்னாடி போ. நான் வரேன்”

என்னோட அம்மா கூட இருந்ததை அப்போ தான் கவனிச்சேன். அம்மா கேள்வி எதுவும் கேட்டுற முன்னாடி நானே பதிலை சொன்னேன்.
“யாருனு தெரியலை மா.”

அம்மா 'யாருனு தெரியாமய பேர சொல்லி கூப்பிடுது' என கேட்டிருக்க வேண்டும். அதற்கான அவகாசத்தை நான் கொடுக்காம முன்னே நடந்து செல்லவும் வேறு வழியின்றி அம்மாவும் பின்னாடி வந்தார்.

ஆலமரத்தின் கீழே அலுவலகத்தின் முன்னே போடப்பட்டிருந்த பலகையிலும் மரத்தின் வேர்களிலும் மாணவர்கள், பெற்றோர்கள் அமர்ந்திருந்தோம். இன்னும் சிலர் வந்து கொண்டிருந்தனர்.

நான் இன்னும் அவள் குரலின் பிடியில் இருந்தே வெளியே வரவில்லை. எனக்கொரு தோழி இருந்தாள் பள்ளிப் பருவத்தின் கடைசி வருடத்தில்.

எந்த பெண்ணிடமும் நானாக சென்று பேசிய பழக்கம் கிடையாது. ஆனால் நாளை கண்டிப்பாக இந்த கணக்கோ, கிரமாரோ செய்துவர வேண்டும் என்கிற சூழல்களில் என்னை சுற்றிக் குவியும் பெண்களுக்கு உதவுவதை தவிர வேறு வழியில்லை. அதனை தாண்டி நானாக சென்று பேசியதில்லை. வெளியேயும் இதே தான். ஆனால் ஒரு நாள் குடியரசு தின சிறப்புரைக்காக கொடிக்கு பின்னால் நிற்கும் போது, ‘நீ வர மாட்டியோன்னு பயந்தேன்’ என்றாள் அவள்.

நான் வணிகவியல் பிரிவு. அவள் உயிரியல் பிரிவு. “எதுக்கு”

“அப்புறம் என்னை பேச சொல்லிடுவாங்களே” என்று சிரித்தாள்.

நான் உணர்சிகளற்று இருந்தேன். “உன்னுடைய எண் கொடு”
கைகளில் குறித்துக் கொண்டாள். நிறைய பேசினோம். அறிகுறிகளற்று வந்து செல்லும் மழை போல வந்ததும் சென்றதும் தெரியவில்லை.

கொஞ்ச நாள் கஷ்டமாக இருந்தது. எதனால் இப்படி என உணரும் வரை. அப்புறம் அதை கடப்பது பெரிய விசயமில்லை என தோன்றவும் பழகிடுச்சு. ஒரு மாதம் ஆனது இதற்கு இடையில்.

3

அலுவலகத்தில் இருந்து நேராக வெளிக் கதவை நோக்கி செல்லும் சாலையில் நானும் அம்மாவும் நடந்து சென்றுக் கொண்டிருந்தோம். அவள் ஓடி வந்தாள்.

“கதிர், உன்னோட நம்பர் கொடு.” கைகளில் குறித்துக் கொண்டாள். அவளிடம் பைல் இருந்தது. அதில் ஒரு தாள் கூடவா இல்லை. கைப்பை அணிந்திருந்தாள். அதில் செல்பேசியே கூட வைந்திருந்திருக்கலாம்.
எண் சொன்னேன்.

“சரி, பார்க்கலாம். ஆன்டி வரேன்” என்று நழுவி சென்றாள்.

அம்மாவுக்கு இப்போது கேட்க கேள்விகள் இருந்தாலும் நான் முந்திக் கொண்டு பதில் சொல்லாமல் அமைதி காத்தேன். அம்மா எதுவும் கேட்கவில்லை.

அங்கிருந்து கிளம்பி வந்தோம். அவள் பெயரை யோசித்துக் கொண்டிருந்தேன். இல்லை, அவளே சொல்லட்டும்.

இப்போதைக்கு அவள் பெயர் ‘மலர்’ என்று இருக்க வேண்டும் என விரும்பினேன்.

காத்திருப்பு நீண்டது.
***

ஏப்ரல் 20, 2020
பிரபாகரன் சண்முகநாதன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...