முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம்.


பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள்.
சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு கையில் அரிக்கேன் விளக்குடன் கண்ணப்பன் முகப்பைத் தாண்டி வீட்டின் வாசலில் இருந்து இறங்கி வேகமாக நடக்க தொடங்கினான். 

வீதியெங்கும் தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சலசலன்னு கால்களை ஒன்று மாற்றி ஒன்று உயர்த்தி உயர்த்தி வைத்து தெருவின் கிழக்கு பக்கத்தை வந்தடைந்து இருந்தான். சகுந்தலா ஆயா வீட்டின் பின்கட்டு வாசல்  அது. 

கதவைத் தட்டினான். வள்ளி அக்கா தான் கதவைத் திறந்தாள். “அக்கா அம்மாவுக்கு வலி வந்துருச்சு” என சொல்லி முடிப்பதற்குள், அவள் உட்புறம் பார்த்து, “ஏங்க...” என சத்தம் போட்டாள். “என்னடி” என குரல் கேட்டவுடனே பதில் சொன்னாள், “சீதா ஆச்சிக்கு வலி வந்துருச்சாம்.” சட்டை பட்டன்களை விரைந்து மாட்டிக்கிட்டு அண்ணன் சைக்கிளை தள்ளியவாறே வீட்டில் இருந்து வெளியே வந்தார். சைக்கிளை வாசலின் நிலைப் படி இடிக்காது இருக்க ஒரு கையால் அதன் கம்பியைப் பிடித்து தூக்கி வெளியே போட்டார். “வாங்க தம்பி” என பின் கேரியரில் கண்ணப்பனை ஏற்றியவாறு மண் சாலையில் சரெர் என சைக்கிள் விரைந்தது. மழை கண்ணின் மேல் படாது இருக்க ஒரு கையை நெற்றியில் வைத்தவாறு சைக்கிளை மிதித்தார் ஒத்தையண்ணன். ஏன் இந்த பேர் என தெரியாது கண்ணப்பன் யோசித்தது உண்டு. அவரது ஒரு கண் வெள்ளி நிறத்தில் இருக்கும். நமக்கு தெரிவது போலவே அவருக்கும் பார்வை தெரியுமா. தெரியவில்லை.

வாசலில் செந்தில் நின்றான். “டே... செந்தீ. சுப்பு செட்டியார் வீட்டுல கார் இருகானு பாரு. மழை வேற விடாது பெஞ்சுட்டு இருக்கு. வண்டி பூட்டுறதுலா ஆகாத காரியம்” ஒத்தை அண்ணன் சைக்கிளை படியின் பக்கவாட்டில் சாய்த்து வைத்து விட்டு பேசியவாறே உள்ளே போனார். முகப்பில் நின்றுக் கொண்டு வளவைப் பார்த்தவாறே சத்தம் கொடுத்தார். “செந்தில சுப்பு செட்டியார் வீட்டுல கார் நிக்குதான்னு பார்க்க சொல்லி இருக்கேன்”
“சீக்கிரம் தம்பி. வலி வந்துருச்சு. கார் கிடைக்கலைனா, பெரிய ஆச்சி வீட்டுக்கு போயி அவுகள யாராவது கூட்டிட்டு வாங்க ப்பா”

பெரிய ஆச்சி வீடு இங்கிருந்து பத்து நிமிஷம் நடந்து போனா வந்துடும். அநேகமா இந்த ஊருல பிறந்த முக்காவாசி பேருக்கு ஆச்சி தான் பிரசவம் பார்த்து இருக்கும். இன்னென்ன ஆளுகன்னு கிடையாது, மொத்த ஊருக்கும் அறிவிக்கப்படாத மருத்துவச்சி பெரிய ஆச்சி தான். பெரிய ஆச்சி வீட்டுக்காரர் பர்மாவுல இருந்ததாகவும் திரும்பி வரும் போது வழிலேயே தொலைஞ்சு போனதாகவும் தாக்கல். ஆனா அதை பத்தி பெரிய ஆச்சி யார் கிட்டவும் பேசியோ புலம்பியோ யாரும் பார்த்தது இல்ல. ஒரேயொரு பையன். அவனையும் பிள்ளை இல்லாத அவங்க அக்கா எடுத்து வளர்த்தது. ஆச்சி மெட்ராஸ்ல படிச்சது. ஊருல யாருக்கு எந்த லெட்டர் வந்தாலும் அவங்க முதல்ல பார்க்க வர்றது ஆச்சியைத் தான். இப்போ வயசான பிறகு கண்ணு மங்கலா தெரியுது. மகமாயி அக்கா தான் சோறு வடிச்சு கொடுத்துட்டு இருக்கு. ஆச்சியோட மகன் வெளிநாட்டுல இருந்து பணம் மட்டும் அனுப்பிட்டு இருக்காரு.

இந்த மழையில பெரிய ஆச்சிய இவ்வளவு தொலைக்கு நடக்க வச்சு கூட்டிட்டு வர்றது சிரமம்னு ஒத்தை அண்ணனுக்கு தோன்றியது. செந்தில் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. கார் கிடைக்கவில்லை என்பது நடையிலேயே தெரிந்தது.

இதன் பிறகும் யோசிச்சுட்டு இருக்க கூடாதுன்னு ஒத்தை செந்திலை இழுத்துட்டு இரண்டு நடையில் சாலையை அடைந்து விட்டான். சாலையில் ஒரு வண்டி கூட போக வர நடமாட்டம் இல்லை.

மழை சத்தமும் இருட்டும் நிரம்பி இருந்த சூழலைக் கிழித்துக் கொண்டு மஞ்சள் நிற ஒளி தூரத்தில் தெரிந்தது. “செந்தீ மறை டா”.

கொஞ்ச நேரத்தில் சீதாவையும் சாந்தியையும் முன்புறம் ஏற்றிக் கொண்டு, பின்புறம் தார்பாயை விரித்து பிடித்துக் கொண்டு செந்தி, ஒத்தை, கண்ணப்பன், கிளினரைத் தாங்கிக் கொண்டு அருகே இருக்கும் ஆஸ்பத்திரி நோக்கி  லாரி சென்றது.

“என்னம்மா இந்நேரம் கொண்டு வந்து இருக்கீங்க...” செவிலியம்மா அலுப்போடு பூட்டி இருந்த கேட்டை உட்புறம் இருந்து திறந்து இவர்களை உள்ளே வர அனுமதித்தாள். “வலி வந்துருச்சு தாயி. டாக்டர் இருந்தா பார்க்க சொல்லுங்கம்மா” என கெஞ்சியவாறு சாந்தி செவிலியரைப் பின் தொடர்ந்தாள். “டாக்டர் இப்போ வர மாட்டாங்க. இங்க கொண்டாந்து போடுங்கப்பா” என சீதாவைத் தாங்கி இருந்த லக்ஷ்மிக்கு கையை உயர்த்தி கட்டளையிட்டாள். “இன்னும் தண்ணீ குடம் உடையல. புள்ள பெக்குறவ தான் வீக்கா இருக்கா. இது எத்தனாவது பிரசவம்” என கேட்டுக் கொண்டே ஊசியைப் போட்டாள்.

செந்தியும் ஒத்தையும் லாரி டிரைவருடன் தீப்பெட்டி தேடிட்டு இருந்தாங்க. போகிற லாரியை எல்லாம் மறித்து தீப்பெட்டி கேட்டார்கள். கடைசியாய் தீப்பெட்டி கிடைத்ததும் பீடி பத்த வச்சிட்டு ஓரமா பாரத்தை இறக்கின பிறகு தான் பேசத் தொடங்கினார்கள்.

“ஏன்னே, இந்த ஆச்சியோட செட்டியார் இங்க இல்லையா...”

“அத ஏன்டா கேக்குற. அந்த அப்பச்சி நல்ல மனுசன். ஊரே பஞ்சத்துல கிடந்தப்போ தினமும் இருபது முப்பது பேருக்கு வடிச்சு போட்ட மகராசரு. எந்நேரமும் எதையாவது எழுதிட்டும் படிச்சுட்டும் இருப்பாரு. எங்கிருந்தோ ஆளுக இவரைத் தேடி வருவாங்க. எப்பவும் கலகலன்னு இருக்கும் வீடு. அவரு நிறைய படிச்சதாலேயோ என்னமோ கொஞ்ச வயசுலேயே மூளை குழம்பிடுச்சு. சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிட்டு இருந்தாரு. அப்போ தான் மகராசி இரண்டாவது புள்ளைக்கு தலை குளிச்சு இருந்தா. வீட்டுல ஆரும் இல்லாத நாளுல கிணத்துல இருந்து பிணமா தான் தூக்குனாங்க அவரை. அப்போவே ஆச்சி உடைஞ்சு போயிட்டாக.” இரண்டு மாசமா தான் இந்த ஊருல இருக்கிற செந்திக்கு ஒத்தை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

கண்ணப்பனை எழுப்பும் போது அதிகாலை மூணு இருக்கும். “உனக்கு தங்கச்சி பாப்பா தான்டா பிறந்துருக்கு” லக்ஷ்மியக்காவை மர பெஞ்சில் படுத்தவாறே பார்த்துட்டு இருந்தான்.”எந்திருச்சு வா” என அவள் சொல்வதற்காக காத்திருந்தவன் போல் எழுந்து வேகமா அம்மாவை நோக்கி சென்ற போது தான் சாந்தியின் அழுகுரல் அவனக்கு கேட்டது.

அப்பாவை வைத்திருந்த அதே பட்டாலையில் அம்மாவும் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்த்தவாறே தூணில் சாய்ந்துக் கொண்டு நின்றான் கண்ணப்பன். பங்காளிகள் எல்லாம் வந்து நிற்க பந்தக்கால் ஊன்றப்பட்டது. களிமண் உருண்டைகள் நான்கும் தாங்கி நிற்க நடுவே ஒரு வெள்ளை துணியில் அம்மா கிடத்தப்பட்டாள்.

அப்பாவிற்கு முடி இறக்கியது போலவே இம்முறையும் முடி இறக்க சொல்லுவார்களா என யோசித்துக் கொண்டிருந்தான் கண்ணப்பன்.

தங்கச்சி பாப்பாவுக்கு என்ன பேர் வைப்பாங்க. தெரியல. முதல்ல பேர் வைப்பாங்களா. அதுவும் தெரியல. அழுகை வருவது போல தான் இருந்தது. 
அப்பாவுக்காக அழுத போது அம்மா பக்கத்துல கூப்பிட்டு சொன்னது நினைவுக்கு 
வந்தது, “நான் இருக்கேன்ல. அழுக கூடாது” தங்கச்சி பாப்பாவிடம் தான் இதை 
சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டான் கண்ணப்பன். அவளுக்கு புரியுமா என்ற சந்தேகம் வேறு வந்து நின்றது.

***
டிசம்பர் 09, 2019
பிரபாகரன் சண்முகநாதன்


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...