முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்


முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez)

மொழிபெயர்ப்பு: அருமை செல்வம், அசதா

காலச்சுவடு @2016

(மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)




     ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.

     கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோடு தொடர்புடைய எல்லோரையும் அவன் உட்பட, நினைவு பதிவுகளின் சேகரத்தை துருவி நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு முழு வடிவிலான பதிவை உருவாக்க விரும்புகிறான். அவனது பதிவே காப்ரியேலின் இந்நாவல்  ‘Chronicle of a Death Foretold’.


அவர்கள் அவனைக் கொல்ல இருந்த அன்று...

     இப்படியாக தான் நாவல் தொடங்குகிறது. சந்தியாகோ நாஸார் துருக்கியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இப்ராஹீம் நாஸார் மகன். தந்தையின் இறப்பிற்கு பிறகு தங்களது பண்ணையை நிர்வகித்து வருகிறான். அவனது நெருங்கிய நண்பனான கதைசொல்லியின் அத்தை மகள் ஆங்கெலா விகாரியோவிற்கும் நகரத்திற்கு பெண் தேடுவதற்காகவே  ஆறு மாதங்களுக்கு முன்பு வந்த பயார்தோ சான் ரோமானிற்கும் திருமணம் நடைபெறுகிறது. கொலை நிகழும் நாளுக்கு முன்னிரவில் தான் திருமணம் முடிந்திருந்தது. அதன் கொண்டாட்டங்கள் விடியற்காலை வரை தொடர்கிறது.

     பயார்தோ சான் ரோமான் முதலிரவில் தன் மனைவி ஏற்கனவே கன்னி கழிந்திருப்பதை அறிகிறான்.  வறுமை குடும்பத்தை சேர்ந்தவளான அவளை மீண்டும் தாய் வீட்டிலேயே கொண்டு சென்று விட்டுவிடுகிறான். அவளது இரட்டை சகோதரர்கள் இதையறிந்து அதற்கு காரணம் யாரென இவளிடம் கேட்கிற போது சந்தியாகோவின் பெயரைக் குறிப்பிடுகிறாள். அவர்கள் இருவருக்குமே அப்படி நிகழ்ந்ததாக நாவலில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை. யாருமே நம்பவும் மறுக்கின்றனர். ஏனெனில் இருவருக்கும் பொதுவாக எதுவுமே இல்லாத போது சாத்தியமே இல்லை என்கிற முடிவு ஏற்பட்டுவிடுகிறது.

     பின்னாளில் கதைசொல்லி அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோதும் அவள் பிடிவாதமாக காரணத்தை கூற மறுத்துவிடுகிறாள்.

     சந்தியாகோவை கொல்ல விகாரியோவின் சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். அதுதான் தங்களது கவுரவதிற்க்கான செயல் என்றும் கருதுகிறார்கள். கிட்டதட்ட காலையிலில் இருந்து தாங்கள் பார்க்கும் அனைவரிடமும் கொல்ல போவதை சொல்லவும் செய்கிறார்கள்.

     மிகவும் நேர்மையானவர்களான சகோதரர்கள் சொல்லும் போது யாரும் நம்பவில்லை. ஆனாலும் ஏதோ நடக்க போகிறது என முன் அறிகின்றனர். சகோதரர்களே தங்களை யாராவது தடுத்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டார்களோ என எண்ணுமளவிற்கு தான் சந்தியாகோவின் வீட்டின் வாசல் அருகே காத்திருக்கின்றனர்.

     எல்லாவற்றையும் மீறி எல்லோரின் முயற்சியையும் மீறி நடப்பது நடந்தே தீரும் என்கிற கோட்டின் மீது காலம் நிகழ்வுகளை அடுக்குகிறது. முன் கதவில் கீறல்கள் தெரியுமளவிற்கு வெட்டுப்பட்ட சந்தியாகோ தன் வீட்டின் பின் வாசல் வழியாக சமையறையில் சென்று விழுந்து சாகிறான்.

   
  கொலையின் நிகழ்வுகளானது டாமினோ விளையாட்டை போல ஒவ்வொரு சீட்டும் அடுத்த இடைவெளியில் சீராக அடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றை உருவினாலும் முழு விளைவினையும் நிறுத்தி விட முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளே இல்லாத அளவிற்கு கதையை கட்டியிருப்பது புனைவின் அபாரத்தை காட்டுகிறது. விதி என்பதும் அதுவே.

     கூர்மையான வருணனை, தெளிவான நடை, சுவாரசியம் கூட்டும் வகையில் நிகழ்வுகளைத் தொகுத்தளித்திருப்பது, வாசகனுக்கான அறிந்துக்கொள்ளல் இடைவெளியை அளித்திருப்பது, தவறவிட்ட வரிகளை ஒன்றோடொன்று இணைத்திருப்பது என நாவலின் பக்கங்களில் உறைந்திருக்கும் உத்திகள் புதிய அனுபவத்தை அளிக்கின்றன.

     அனால் இதுவொரு மர்ம நாவலாகவோ, துப்பறியும் நாவலாகவோ அமைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருந்தபோதும் நினைவுகளுக்கான தொடர்புகளை அளிக்கும் இலக்கிய பதிவாக நாவல் உருப்பெறுகிறது.  

      ரோஜெர் மார்டின் டு கார்ட் தபால்காரன் நினைவில் வந்து போகிறான் நகர் மாந்தர்கள் குறித்த வர்ணிப்பில்.

     எதிர்பார்ப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பிந்தைய விளைவுகளுக்குமான இடைவெளிகளின் பலவித பரிமாணங்களை உள்ளடக்கிய கதை சொல்லலே முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...