முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கெங்கும் நீலம்

காணும் இடமெல்லாம் நீலம். பேரமைதியை அணிந்திருக்கிற கடலின் முகமெல்லாம் நீலம். விரிந்திருக்கும் அதன் எல்லையில் தொடங்கி மேலெழும் வானமெங்கிலும் நீலம். 

சூரியன் மறைந்த பிறகும் மீதமிருக்கும் வெளிச்சத்தில் இதமான கடற்காற்றின் குளிரில் கடலுக்கு பத்து அடிக்கு மேலிருந்து தடதடக்கும் தொடர்வண்டியின் கதவோரம் மிகச் சரியாக பத்து நிமிடங்கள் நேரம் செலவழிக்க நீங்கள் தயாராக இருந்தால் பதிலீடாக பெருவியப்பினையும்  இயற்கையின் மீதான பெரும்நம்பிக்கையையும் நாம் தான் இயற்கை, இயற்கை தான் நாம் என்பதனையும் உணர முடியும்.

தமிழ்நாட்டின் மண்டபம் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்தில் தான் அந்த பயணம்.

தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரத்தை கடல் துண்டித்திருப்பினும் மொழி இணைத்திருக்கிறது. இந்த வாக்கியம் சரியா என எனக்கே குழப்பமாக இருக்கிறது. பலகைகளில் தொடங்கி முகங்கள் வரை தமிழைத் தேட வேண்டிய நிலை தான்.  கோவிலின் தரையெங்கும் வடமொழி வாசகங்கள். பலகை அனைத்திலும் தமிழுக்கும் சிறிதும் இடம் உண்டு. 

சுற்றி சுற்றி மடங்கள். இராமேஸ்வரத்தினை இரண்டாக வகுந்து விட முடியும். புனித (?) தலம் மற்றும் மீனவ கிராமம் என. புனித தலம் என்பது குறித்து என்னிடம் கருத்துகள் இல்லை. மாலைகள், பூக்கள், அழுக்கடைந்த துணிகள், சாம்பல் இவை குறித்து கடலுக்கு புகார்கள் இருக்கலாம். தொழில் போட்டி, என் வியாபாரத்தை இவன் கெடுத்தான், அவன் வியாபாரத்தை நான் கெடுப்பேன் என குடுமி சண்டைகள் குறித்து அவர்களுக்குள் புகார்கள் இருக்கலாம். ஆதரவற்ற அல்லது துண்டித்துக் கொண்டவர்களின் பசிக்கான வழியை புனித தலம் ஏற்படுத்தலாம். ஒரு பகுதி மக்களுக்கு தொழிலுக்கான வழியையும் கொடுத்திருக்கலாம். தொடர்ந்து பாவங்கள் (எது பாவம் என்பது வேறு சப்சக்ட்) செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு விமோசனம் என்னும் நிறைவை கொடுக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய் சொர்க்கத்துக்கான டிக்கெட் புக்கிங் வசதியையும் புனித தலம் செய்துக் கொடுக்கலாம்.

ஆனால் மீனவ கிராமம் என்கிற பகுப்பு கடலை நம்பியது. உழைப்பை நம்பியது. ஒவ்வொரு முறை மீனவர்களைக் கைது செய்யும் போதும் வலைகள், படகுகளைச் சேதப்படுத்தும் போதும் இயற்கை அறிவிப்புகளற்ற சூழல்களை அளிக்கும் போதும் தங்கள் வாழ்வியலை விட்டுத் தர மறுக்கும் போர்க் குணம் நிரம்பியது. சுற்றுலா, புனிதம் என்பதன் பேரில் கோவில்களுக்கு செல்லும் கோர வியாபாரத்துக்கு இரையான எத்தனையோ இடங்களுள் இதுவும் ஒன்று. 

நிலத்தின் பிரதிநிதிகளுக்கு கடல் புதிது. கடலின் மைந்தர்களுக்கு கடல் வாழ்வின் ஒரு அங்கம்.

இராமநாதபுரத்தை நெருங்கும் போதே உப்பு காற்றினை தோல் உணரத் தொடங்குகிறது. மீன் மணத்தினை வீச்சமாக பரிமாற்றமடையச் செய்கிறது நாகரீக மூளை.

அதிகாலை பாம்பனுக்குள் நுழைந்தேன். இடிபாடுகளோடு கீழே கிடக்கும் பழைய கட்டிட குவியல்கள். தன்னுள் ஈர்த்துக் கொண்டு இளம்பெண்ணின் சிறுநகை போல சலசலக்கும் கடல். அதன் முடிவுகளற்ற பரப்புக்குள் அங்கங்கு சிறு புள்ளிகள் போல படகுகள். உன்னத தருணங்கள் இராமேஸ்வர தீவு நிலத்தில் கால் வைக்கும் போது காணாமல் போய் விடுகின்றன.

சுற்றிலும் குப்பைகள். கடற் காற்றின் பிசுபிசுப்பை விட கசகசவென அலையும் குப்பைகளின் வீச்சம் முகத்தை சுளிக்க செய்கிறது.

வெயில் சுள்ளென்று அடிக்கிறது. நிழலைத் தேடி தாகம் கொள்கிறது மனம்.

சடங்குகள் என்ற பெயரில் கடலில் முங்கிடும் மனிதர்களை மனத்துக்குள் வெறுத்துக் கொண்டேன் நானும் நீரில் மூழ்கியவாறு. அப்படியொன்றும் திருமிகு கடவுளர்களின் ஆசிகள் வேண்டியதில்லை தான். கட்டாயங்கள் நிரம்பியது குடும்பம்.

கோவில் என்கிற உணர்வே ஏற்படாத அல்லது ஏற்பட்டுவிடக் கூடாதென்ற வலிந்து நிறுவப்பட்ட வரிசைகள். வழிபாடு என்பதன் மிக மோசமான பரிணாம வளர்ச்சியைக் காண முடிந்தது.

மூச்சு முட்டி கட்டுபாடுகளைத் தாண்டி கடவுள் (?) ஆமா அவரையும் பார்வையிட்டு வெளியே தலைக்காட்டும் போது தண்டனை தரும் பாவனையோடு சூரியன் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

ஓய்வுக்கு பிறகான மாலை நேர பாம்பன் இரயில் பயணம் மற்றுமொரு பேரமைதி உணர்வை இயற்கையோடான பிணைப்பை உணர்த்தி நகர்ந்தது.


வெளிச்சம், காலை, இருள், இரவு, குளிர், கடல், மேகங்கள், வானம் , காற்று, நீங்கள், நான், மூளை, சமூகம், கருத்தியல், அறிவு, மூடத்தனம், பக்தி, வழிபாடு, பக்தியின்மை, சடங்குகள் எல்லாமும் எல்லாமும் ஒன்றையே சொல்கின்றன. இயற்கை தான் நாம். நாம் தான் இயற்கை. இயற்கையின் அழிவு நமக்கும் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...