முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்பயா, சுவாதி, நந்தினி... அடுத்து தீக்கிரையாவது யாரெனத் தெரியும் வரை அமைதி காக்கப் போகிறோமா?

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்கோர் குணமுண்டு”

உலகமெங்கிலும் தங்கள் பண்பாட்டை காக்க தொடர்ந்து அறவழியில் போராடி தமிழர்கள் மீதான பார்வையை மாற்றியமைத்த தமிழ் பேசும் நன்மக்கள் கலைந்து சென்ற கடற்கரை மணலின் ஈரம் காயும் முன்... அரங்கேறியிருக்கிறது மற்றொரு கோரத் தாண்டவம், அரியலூரில்.

இதுபோன்ற பிரச்சனைகள் உருவாகிய பிறகு அவை குறித்து பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. விவாதிக்க மட்டுமே படுகிறது. செயல் வடிவத்திலோ கொள்கை வடிவத்திலோ அதற்கான தீர்வு எப்போதுமே பெறப்பட்டதில்லை.

நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கொடூர நிகழ்வின் தீர்வு இன்று எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மறதி தேசிய வியாதி- அதற்கேற்ப நேற்றைக்கான செய்தி இன்று வேண்டியதில்லை. ஏனெனில் நேற்றே நாம் போதுமான அளவிற்கு அதை பேசிவிட்டோம். இன்றைக்கான நடப்பு நிகழ்வின் நீரோட்டத்தில் தொற்றிக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் கடமை என்பது போலாகிவிட்டது.

இந்த வைரல் என்பது பல நேரங்களில் செயற்கையாகவும் உருவாக்கப்பட்டுவிடுகிறது. சுயநலக் கிருமிகள் எளிதில் கிடைக்கும் இவ்விளம்பர நெருப்பில் குளிர்காய்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சமானியன் எவ்வளவு போட்டாலும் பத்த மாட்டேன்கிறது என்கிற அலுப்புடன் நெட் கார்டு போடுவதற்கான ரீசார்ஜ் கடையைத் தேடியலைந்துக் கொண்டிருப்பான்.

இதன் பொருள் சமூக ஊடகங்களே தீங்கானது என்பதல்ல. அவை இல்லையெனில் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்பே இல்லாது போயிருக்கும். அதே நேரத்தில் இந்த ஊடகங்கள் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கிறது, தவறுகளுக்கே இடமேயில்லை என்று சான்றிதழ் கொடுத்துவிடுமளவிற்கும் அவற்றின் செயல்பாடு இருந்ததில்லை. உண்மை எது போய் எது என யோசிக்கவே முடியாத அளவிற்கு இந்த வலையானது சிக்கலாக பின்னப்பட்டிருக்கிறது.

வரப்புன்னு இருந்த களையும் இருக்கதானே செய்யும் என்று கடந்துவிடுவது தெரிந்தே நடக்கும் விளம்பர குறுக்கு யுக்திகளை ஏற்றுக்கொண்டது போலாகிவிடும். அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதனின் கண்டுபிடிப்புகள். ஆகையால் அவற்றில் குறையும் நிறையும் இருக்கவே செய்யும். எப்போது சமூகம், அன்னப்பறவை போல தண்ணீரைப் பிரிக்க கற்றுக்கொள்கிறதோ அப்போது தான் அது வளர்ச்சியாக கருதப்படும். இப்போது பிரச்சனைக்கு வருவோம்.

இதனை வெறும் ஆண்-பெண் இடையிலான சிக்கலாக மட்டும் பாவிக்க கூடாது. இது ஒட்டுமொத்த சமூகத்தின் சிக்கல். ஆணாதிக்கம் என்று ஒருசாரார் வாதிடுவதும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அதீத சுதந்திர ஆடை தேர்வுகள் என்று மற்றொரு சாரார் வாதிடுவதும் மட்டுமே இந்த சிக்கலுக்கான காரணங்கள் இல்லை.

இவற்றோடு இந்த சமூகம் தனது அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவித்த ஒழுக்கம் சார்ந்த பாடங்களும் சேர்ந்தே கேள்விக்குள்ளாகிறது. நவீனம் என்பது பழையதை முற்றிலும் புறக்கணித்துவிடுவது இல்லை. வளர்ச்சி என்பது மேலும் பண்பட்டதாக உருவாவதே தவிர நல்ல விசயங்களையும் சீர்குலைத்துக் கொள்வதில்லை. இன்றைய சூழல் அதைதான் செய்துக் கொண்டிருக்கிறது.

கூட்டுக் குடும்பங்களாக இருந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியை இருவருக்கும் இடையிலான பருவத்தைக் கொண்ட மாமாவோ சித்தப்பாவோ சமன் செய்வார். அதன் மூலம் நமது பண்பாடு மரபுகள் கட்டுபாடாக பயிற்றுவிக்கப்படாமல் தோழமையுடன் புரியவைக்கப்படும். இதே கற்றல் பாடங்கள் பெண்களுக்கும் அத்தை வழியாகவோ சித்தி வழியாகவோ அம்மா வழியாகவோ கடத்தப்படும். அதுவே ஆண்-பெண் புரிதல் பற்றி வரையறுத்துக் கொண்டிருந்தது.

இப்போது கூட்டுக் குடும்பங்களுக்கான வாய்ப்பு இல்லை என்பதனால் அந்த பாடங்களும் இல்லாமல் போய்விடுகிறது. அதை ஈடு செய்யும் பொறுப்பு யாருக்கு உரியது? பெற்றோரும் கல்வி நிலையங்களுமே அந்த பணியை கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க விரும்பினால்.

அரசுகள் இதற்கான வழிகள் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. ஏனெனில் ஆட்சி யாரிடம் என்பதிலே பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், எதிர்காலமாவது... மண்ணாவது...

வீட்டில் தாத்தா, பாட்டிகள் இருப்பதில்லை. அவர்கள் இருக்க வேண்டிய இடமென்று ஒன்றை ஒதுக்கிவிட்டாயிற்று. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிள்ளைகளுடன் பேசக் கூட நேரமில்லை. பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் திரையைவிட்டு அகலவே விருப்பமில்லை. இறுதியாய் சொன்னதற்கும் பெற்றோரே காரணம். எப்படியென்றால் அம்மா சமையல் செய்யும் போது தொல்லை தரக்கூடாது என்பதற்காக திருகினால் ஓடும் பொம்மைகளை குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைப்பார்கள். அதன் மாறுப்பட்ட வடிவமே இன்றைக்கு இளைய தலைமுறையினரிடம் தவழும் ஸ்மார்ட் திரைகள்.  

குழந்தை திருமணம், சாதிக் கட்டுபாடு, பெண் அடிமைத்தனம் இவையெல்லாம் களையப்பட வேண்டிய கூறுகள் என்று அறிந்திருக்கும் நவீனத்துவம், எவற்றையெல்லாம் கைவிட்டுவிடாமல் பின்பற்றவேண்டியதிருக்கும் என்பதில் எவ்வித அக்கறையும் செலுத்தாதற்கு என்ன காரணம்?

சினிமாக்களின் அசுர குணத்தையும் மறைத்துவிட முடியாது. நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை தான் அவர்கள் காட்டுவார்கள். அல்லது அவர்கள் காட்டுவதை தான் விரும்ப வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்கிவிடுவார்கள். பின்னே எப்படி ரேஞ்ச் ரோவரும் பி.எம்.டபுள்யூ வும் சாத்தியமாகும்?


இந்த கட்டுரை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்றைய செய்தித்தாள் வாசிக்க நேர்ந்தது. அதில் இருந்து ஒரு மூன்று செய்திகளின் தலைப்பை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

தூத்துக்குடியில் வாலிபருடன் விஷம் குடித்த பெண் தபால் ஊழியர்
கள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை
பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: கல்லூரி மாணவர் கைது
- சேலம்
பிளஸ் 2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் பிடிபட்டார்
சிவகங்கை

இவை எல்லாம் தான் நமது இன்றைய கலாசார கூறுகளை படம்பிடித்துக் காட்டும் செய்திகள். முதல் செய்தியின் தலைப்பு பார்த்த உடனே உங்களை படிக்கவைக்கும் கவர்ச்சியை தெளித்து நிரப்பியதை போல இருக்கிறதல்லவா? பிறகு செய்திதாள்கள் விற்பணைய எப்படி உயர்த்துவது. இரண்டாவது மூன்றாவது செய்திகளில் பாதிக்கப்பட்ட இருவருமே 12 ஆம் வகுப்பு மாணவிகள். இந்த கொடூரங்கள் நமக்கு செய்தி வழியாகவே சீரணிக்க இயலாதபோது அந்த பெண்ணின் பெற்றோராகவோ உடன்பிறந்தவர்களாகவோ சிந்தித்துப் பாருங்கள்.


வெறும் ஒரு நாள் பதிவுகள் இவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வருடம் என்பது மொத்தம் 365 நாட்கள் அவற்றில் சராசரியாக ஒருநாளைக்கு மூன்று என்ற கணக்கில் வெளிவந்தவற்றின் எண்ணிக்கை, தவிர்த்து இன்னும் வெளிவாராத செய்திகள் எத்தனையோ? - கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லையெனவே நினைக்கிறேன். புரிந்துக் கொள்வீர்கள் தானே?

இனக்கவர்ச்சிக்கும் பருவ மாறுதலுக்கும் காதலுக்கும் இடையேயான புரிதல்களை இளைய தலைமுறைக்கு பயிற்றுவிக்காத குற்றம் யாரை சேரும்? குற்றம் யாருடையதாய் இருப்பினும் அதற்கான தீர்வுகள் தர வேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்கின்றது?


அமைதியாய் இருப்போம், அமைதியாய் மட்டும் இருப்போம், பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டாள் என்று எப்போது ஒரு பெண்ணின் பெயர் தொடர்ந்து நேரலையில் உச்சரிக்கப்படுகிறதோ, அதுவரை.

நிர்பயா, சுவாதி, நந்தினி - இதுபோன்று நீளும் கருப்புப் பட்டியல் இன்னும் எத்தனை அபலை பெண்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்க காத்திருக்கிறதோ...

-பிரபா






 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...